‘தபாங் 3’ வருவாயை விட முக்கியமானது சிஏஏ போராட்டம் - சோனாக்‌ஷி சின்ஹா

‘தபாங் 3’ வருவாயை விட முக்கியமானது சிஏஏ போராட்டம் - சோனாக்‌ஷி சின்ஹா
‘தபாங் 3’ வருவாயை விட முக்கியமானது சிஏஏ போராட்டம் - சோனாக்‌ஷி சின்ஹா
Published on

‘தபாங் 3’-ன் முதல் நாள் வசூல் குறித்து பேசுவதை விட, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நாடு தழுவிய எதிர்ப்புகள் பற்றிய விவாதங்கள் மிக முக்கியமானவை என நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தபாங் 3’. இப்படத்தை சல்மான் கான் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படம், கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, சுதிப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் நாள் 24.5 கோடி வசூல் செய்தது. சிஏஏக்கு எதிரான போராட்டத்தால் ‘தபாங் 3’ படத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏஞ்சல் எக்ஸ்பிரஸ் அறக்கட்டளையின் நலிந்த குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட சோனாக்‌ஷி சின்ஹா, செய்தியாளர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், “நாட்டில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். எது முக்கியம் என்று மக்களுக்கு தெரியும் என நான் நினைக்கிறேன். ஆனாலும் எங்கள் படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இது ஒரு திரைப்படத்தை விட முக்கியமானது” எனத் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் இந்த நாட்டு மக்களுடன் இருக்கிறேன். தெருக்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை நான் உணர்கிறேன். அவர்களிடமிருந்து அந்த உரிமையை நீங்கள் பறிக்க முடியாது. தங்கள் கருத்துகள் குறித்து குரல் கொடுக்கும் மக்களை பார்த்து நான் பெருமை படுகிறேன். நான் அவர்களுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

ஏன் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் சிஏஏ போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க மறுக்கின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சோனாக்‌ஷி, “யார் அவரது கருத்து குறித்து குரல் கொடுக்க விரும்புகிறார்களோ அவர்கள் குரல் கொடுப்பார்கள். யார் விரும்பவில்லையோ அவர் கொடுக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, அதுவும் அவர்களின் உரிமை” எனத் தெரிவித்தார்.

ஆனால் பாலிவுட்டின் பெரியவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க பயப்படுகிறார்களா? என்று கேட்டதற்கு “அவர்கள் பயப்பட மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் பிரபலங்கள் தெருக்களில் வரும்போது, முழு கவனமும் அவர்கள் மீது திரும்புகிறது. மீடியாவின் கேமராக்கள் அவர்களை பின்தொடரத் தொடங்கும் என்பது நமக்கு தெரியும். இதன் காரணமாக மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். அவர்களும் கூட்டத்தின் ஒரு அங்கம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால், அவர்கள் நிச்சயமாக வெளியே வருவார்கள்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், “திருட்டு படங்களை பார்க்காதீர்கள் என்று எவ்வளவு காலம் வலியுறுத்தப் போகிறோம் என தெரியவில்லை. ஏனெனில் இது எங்கள் தொழில்துறையை எதிர்மறையான வழியில் பாதிக்கிறது” எனவும் சோனாக்‌ஷி சின்ஹா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com