என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், 9-வது நாளாக நேற்று மதுரை விளக்குதூன் பகுதியில் இருந்து தெப்பக்குளம் வரை பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
அப்போது முனிச்சாலை பகுதி அருகே அண்ணாமலை வருகை தந்த போது மதுரை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற கொள்கை பரப்பு தலைவர் பத்ரி சரவணன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் கொடியுடன் வரவேற்றனர். பாஜக அண்ணாமலை யாத்திரையின் போது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ரசிகர்கள் வரவேற்றது பெரும் பேசு பொருளாகி வருகிறது.
இந்நிலையில் மதுரையில் அண்ணாமலை யாத்திரையின் போது விஜய் மக்கள் இயக்கம் கொடியுடன் வரவேற்ற விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள தளபதி மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ''தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.