தமிழ் சினிமாவில் கதைப் பஞ்சம் என நீண்டகாலமாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. உண்மையில் அப்படி ஒன்று இல்லவே இல்லை. கதைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை.
நல்ல கதை சொல்லிகளுக்குத் தான் பஞ்சமே. உலகம் உயிரோடு சுழலும் மட்டும்., மனித வாடையானது காற்றின் கடைசி துகளில் மிதக்கும் வரையிலும் இங்கு
ஆயிரமாயிரம் கதைகள் தினம் தினம் பிறந்து கொண்டுதானிருக்கும். நாம் இந்த உலகை நுட்பமாக கவனிக்கத் தவறுவதால் ஏற்படும் தோற்றப் பிழை தான் இந்த கதைப்
பஞ்சம்.
இந்தியப் பெருநிலம் என்பது மற்ற உலக தேசங்களின் நிலங்களை விட முற்றிலும் மாறுபட்டது. பல நூறு கலச்சாரங்கள். பல்வேறு மொழி பேசும் மக்கள். ஆண்டாண்டு
காலமாக கடை பிடிக்கப்படும் நம்பிக்கைகள். அதற்குள் ஒளிந்து கிடக்கும் செவிவழிக் கதைகள் என ஆராயத் துவங்கினால் கிடைக்காத கதைகளா என்ன...? விக்ரமாதித்யன்
கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், தெனாலி ராமன் கதைகள், தமிழ் நாட்டார் கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், சமகால இலக்கியங்கள் என நீளும் நம் கதை சொல்லும்
பண்பாட்டின் கூறுகளை தற்காலத்துக்கு ஏற்ப மறு உருவாக்கம் செய்தாலே இன்னும் பல லட்சம் சினிமாக்களை நாம் அழகாக எடுக்க முடியும்.
மகாபாரதம் பல இந்திய மொழிகளில் நேரடியாக அப்படியே சினிமாவாக உருவாக்கப்பட்டது. மகாபாரதத்தில் கர்ணனின் பகுதியினை மட்டும் பிரித்து இயக்குனர் மணிரத்னம்
தளபதி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். இராமாயணத்தில் ராமன் சீதையை தேடிப் போகும் கதை தானே மணிரத்தினம் இயக்கிய ராவணன் திரைப்படம். புஸ்கர்
காயத்ரி இயக்கிய விக்ர வேதா திரைப்படம் கூட வேதாளம் விக்ரமாதித்யனின் தோளில் தொற்றிக் கொண்டு போகும் கதை தானே. இப்படி இந்தியா முழுக்க அந்தந்த மொழி
பேசும் மக்களின் வாழ்வில் இருந்தும் சிறுதெய்வ வழிபாடு, கிராம பழக்க வழக்கங்கள் தொட்டு பல லட்சம் கதைகள் நம்மிடம் கொட்டிக் கிடக்கிறது.
தற்போது மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சைக்கோ திரைப்படமும் கூட ஒரு ஆதிகால புத்தர் கதை தான். புத்தர் வாழ்ந்த காலத்தில்
அங்குலிமாலா என்றொரு கொடூர கொலைகாரனும் வாழ்ந்து வந்திருக்கிறான். சைக்கோ திரைப்படத்தில் வரும் கொலைகாரனின் பெயரும் அங்குலிமாலா தான். புத்தர்
காலத்தில் வாழ்ந்த அங்குலிமாலா பற்றி அறுதியிட்டு இதுதான் என்றில்லாமல் சில வேறு கதைகள் சொல்லப்படுகிறது.
அங்குலிமாலாவின் குருவானவர் நீ ஆயிரம் பேரின் விரல்களை கொண்டு வந்தால்தான் உனக்கு அறிவு புகட்டுவேன் எனக் கூற ஆவேசமாக கிளம்பிய அங்குலிமாலா பல
நூறு பேரைக் கொன்று அவர்களின் சுண்டு விரலை வெட்டுகிறான். ஆயிரம் விரல்களைச் சேர்த்து தனது குருவுக்கு மாலையாக அணிவிக்க அப்படிச் செய்தான். 999 பேரைக்
கொன்று அவர்களின் விரல்களைச் சேகரித்த அங்குலிமாலா ஆயிரமாவது நபரைத் தேடும் போது புத்தர் எதிரே வந்தார். புத்தரின் அன்பால் மனம் திருந்திய அங்குலிமாலா
பின்னாளில் புத்தம் சரணம் கச்சாமி என புத்த பிக்குவாகவே மாறியாதாக ஒரு கதையுண்டு.
இன்னொரு கதையுண்டு, கவுதம புத்தர் கோசலை நாட்டுக்கு வருவதாக செய்தி அறிந்த அவ்வூர் மக்கள் அவரை வரவேற்க காத்திருந்தனர். புத்தரும் வந்தார். மக்கள்
அவரைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினர். அவருக்கு நல்ல உணவு கொடுத்து கவனித்துக் கொண்டர். கூடவே புத்தரிடம் “நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
இங்கே அங்குலிமாலா என்றொரு வழிப்பறிக் கொள்ளையன் இருக்கிறான். அவன் வீடு இந்த திசையில் தான் இருக்கிறது. நீங்கள் அவன் கண்ணில் மட்டும்
சிக்கிவிடாதீர்கள்” என்றார்களாம்.
ஆனால் அங்குலிமாலாவின் இருப்பிடம் இருக்கும் திசை நோக்கி நடந்தார் புத்தர். எதிர்பார்த்தது போலவே அங்குலிமாலா எதிரே வந்தான். புத்தரைக் கொல்ல முயன்ற
அவனைப் பார்த்து புத்தர் புன்னகைத்தார். புத்தர் வெளிப்படுத்திய அன்பின் ஒளியை எதிர் கொள்ள முடியாத அங்குலிமாலா புத்தரின் சீடனாகவே மாறினான். பத்து
வருடங்கள் கடந்த பிறகு புத்தர் அங்குலிமாலாவை அழைத்து இனி நீ அன்பை போதிக்கும் தகுதியினை அடைந்தாய் மக்களிடன் அன்பை போதிக்கப் புறப்படு என்றார்.
ஆனால் மக்களிடம் அன்பைப் போதிக்கப் போன அங்குலிமாலாவை மக்கள் கல்லால் அடித்தனர். அதற்கு முன்புவரை அங்குலிமாலா என்றாலே பயந்து நடுங்கியவர்கள் தான்
அவர்கள்.
சைக்கோ படத்தில் வரும் அங்குலிமாலா என்ற கொலைகாரன் பலரையும் பிடித்து கொலை செய்கிறான். அவர்களின் விரல்களை வெட்டுகிறான். இறுதியாக உதயநிதி
அங்குலிமாலாவின் முதுகில் கைவைத்து நான் உன்ன கொல்ல வரல எனக் கூறும் போது அவன் அந்த அன்பால் தடுமாறுகிறான். சைக்கோ படத்தில் உதயநிதியின்
ஸ்டாலினின் பெயர் கவுதம். ஆம் கவுதம புத்தரின் பெயர் தான்.
அங்குலிமாலா பற்றி இன்னும் சில கதைகளும் உண்டு. அக்காலத்தில் மக்கள் சூரியன் சந்திரனைக் கண்டு அஞ்சியதாகவும் வனம் என்றாலே பயந்து கிடந்ததாகவும், புத்தர்
மக்களின் கைகளை இறுக பற்றி காடுகளுக்கு அழைத்துச் சென்று, காடு நம் வாழ்வில் ஒரு அங்கம் அங்குள்ள விலங்குகள் தேவையின்றி உங்களை தொந்தரவு செய்யாது
என போதித்ததாகவும் ஒரு கதை உண்டு. சில இடங்களில் அங்குலிமாலா என்பது மனிதனே அல்ல வனத்தைத் தான் அங்குலிமாலா என்று சொன்னதாகவும் வனம் கூட
வனமல்ல மனித மனதில் இருக்கும் இருள்தான் அது, அதனைப் போக்கவே புத்தர் அன்பை போதித்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படியான புத்தர், அங்குலிமாலா கதையினை மிஸ்கின் தனது சைக்கோ திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கிறார்.