மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித் 'நேர்கொண்ட பார்வை' கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. இந்தப் படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். 'நேர்கொண்ட பார்வை'-யின் வெற்றியால், இந்தக் கூட்டணி மீண்டும் 'வலிமை' படத்தில் இணைந்தது. 'வலிமை'தான் முதலில் பேசப்பட்ட கதை என்றும், அதற்கு முன்பு ஒரு சிறிய பட்ஜெட்டில் ஒரு ரீமேக்கை முடித்துவிடலாம் என்ற திட்டத்தில் 'நேர்கொண்ட பார்வை' எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதன்படி பரபரப்பாக முடிக்கப்பட்டது 'நேர்கொண்ட பார்வை'.
அதேவேகத்தில் 2019ம் ஆண்டு அக்டோபரில் பூஜையுடன் தொடங்கியது 'வலிமை'. அதுதான் 'வலிமை'யின் முதல் அப்டேட். அதற்கு பிறகு படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றுவரை எதுவும் வெளியாகவில்லை. 16 மாதங்கள் ஒரு பெரிய ஸ்டாரின் ஒரு அப்டேட் கூட வரவில்லை என்பது உள்ளபடியே அவரது ரசிகர்களுக்கு பெரிய வருத்தமே. அதன் தாக்கமே இன்று ட்விட்டரில் தினம் தினம் 'வலிமை' அப்டேட் தொடர்பான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.
இடையே விஜய், சூர்யா, சிம்பு, கமல், ரஜினி, தனுஷ், விக்ரம் என தமிழ் சினிமா நாயகர்களின் அப்டேட்டுகள் வர, ஏக்கத்தில் தவித்த அஜித் ரசிகர்கள் அப்டேட் வேண்டி ட்விட்டரை தெறிக்கவிட்டனர். உடனடியாக அறிக்கை விடுத்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, காயங்களையும் பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் முடித்துக்கொடுக்க அஜித் நடிக்கிறார். அனுபவமிக்க தயாரிப்பாளர் போனி கபூரும், அஜித்தும் இணைந்து சரியான நேரத்தில் அப்டேட் தருவார்கள். அதுவரை காத்திருந்து அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் எனக் கேட்டுக்கொண்டார். நாட்கள் ஓட ஓட மீண்டும் அப்டேட் கேட்டு அதிர்கின்றன சமூக வலைதளங்கள். சோஷியல் மீடியா என்பதையும் தாண்டி கவனம் பெறுவதற்காக கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி மோடி வருகையின் போது கூட 'வலிமை' அப்டேட் என குரலெழுப்புகின்றனர் ரசிகர்கள். 'என்னதான் ஆச்சு 'வலிமை'க்கு?' என ரசிகர்கள் கேட்பது புரிகிறது. அதேவேளையில் இந்திய அளவில் மிகப்பெரிய தயாரிப்பாளராக போனி கபூர் ஒரு படத்தின் அப்டேட்டை கொடுக்காமல் இழுத்தடிப்பாரா எனவும் யோசிக்க வேண்டும். அதற்கும் காரணம் உள்ளது.
ஒரு படம், ஒரு தயாரிப்பு என்றில்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என போனிகபூரின் தயாரிப்பு இந்தியா முழுவதும் நீள்கிறது. தமிழில் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தின் தெலுங்கு ரீமேக் கிட்டத்தட்ட வெளியாகும் நிலையில் இருக்கிறது. தெலுங்கு அஜித் என்று அழைக்கப்படும் பவன்கல்யாண் அங்கு நடித்துள்ளார். அதேபோல் இந்தியிலும் அஜய் தேவ்கன் நடிக்கும் 'மைதான்' என்ற பயோகிராபி படத்தை தயாரிகிறது போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம். ஒவ்வொரு மொழியிலும் பெரிய நடிகர்களை கையாளுவதால் அவசரமின்றி சரியாக இடைவெளியில் படத்தை வெளியிடுவதில் கவனம் செலுத்துகிறார் போனி கபூர். அதேவேளையில் 'வலிமை' படம் கிடப்பில் போடப்படவும் இல்லை. கொரோனா இடைவெளியால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு அதன் பின்னர் முழு வீச்சில் நடைபெற்றது.
போனி கபூரின் கணக்குப்படி அடுத்து தெலுங்கு அஜித் பவன்கல்யாண் படமான 'வக்கீல் சாப்' வெளியிடுவதில் முழு மூச்சாக உள்ளார். சமீபத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு பேசிய அவர், ஏப்ரலில் வக்கீல் சாப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்திருந்தார். அதன்படி முதல் இலக்கு தெலுங்கில் பவன் கல்யாண். அடுத்த இலக்காக தமிழ் வலிமை இருக்குமென தெரிகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்பார்ப்புடன் அஜித் படம் வெளியாகவுள்ளதால் செய்யும் சம்பவத்தை சரியாகவும், சிறப்பாகவும் செய்யவே படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரசிகர்களின் ஆர்வம் புரிந்தாலும், அவசரகதியில் அரைகுறையாக எதையும் கொடுக்கக் கூடாது என்பதையே படக்குழு யோசிப்பதாக தெரிகிறது.
'லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வரும் படம். காத்திருந்து அஜித்தை திரையில் காணுவதும் தனி கெத்துதான் எனக் கூறுகின்றனர் அஜித் ரசிகர்கள் பலர். தங்கள் நடிகரை கொண்டாட ஒரு அப்டேட் கொடுங்களேன் என்பதும் சில அஜித் ரசிகர்களின் அன்பு கோரிக்கையாக உள்ளது . அஜித், போனி கபூர், ஹெச்.வினோத், யுவன் சங்கர் ராஜா என்ற பெரிய கூட்டணி கைவைத்த ஒரு படம் முழுமையாகவும் திருப்தியாகவும் முறையாகவும் ரசிகர்களிடம் வந்து சேரும்; அதுவரை பொறுமை வேண்டும் என்பதே படக்குழுவின் நிலைப்பாடாக உள்ளது. எது எப்படியோ, காத்துக்கிடக்கும் ரசிகர்களுக்கு வரப்போகும் 'வலிமை' படம் மிகப்பெரிய கொண்டாட்டமாகவே அமைய வேண்டுமென்பதும், காத்திருப்புக்கு சரியான பதிலை வினோத் கொடுப்பார் என்பதுமே அனைவரின் எதிர்பார்ப்பு.