“நிபந்தனை அற்ற மன்னிப்பு கோருகிறேன்” - ஆதிபுருஷ் வசனகர்த்தா மனோஜ்
பிரபாஸ், சயீஃப் அலிகான், கீர்த்தி சனோன், சன்னி சிங் உள்ளிட்ட பலரின் நடிப்பில் தயாரான படம் ‘ஆதிபுருஷ்’. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் கடந்த 16-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், கடும் விமர்சனங்களை சந்தித்தது. டீசர் வெளியானபோதே சிஜி பணிகள் சரிவர இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதனை சரிசெய்து படத்தை வெளியிட்டப் பின்பும் கிராபிக்ஸ் பணிகளை பலரும் விமர்சனம் செய்தனர்.
இது ஒருபுறமிருக்க, படத்தில் உள்ள வசனங்கள், கதாபாத்திரங்களை அவமதிப்பதாகப் பல்வேறு தரப்பில் இருந்தும் சர்ச்சை எழுந்தது. மேலும், ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் தொடர்பான விமர்சனம் மற்றும் சர்ச்சைகள் குறித்து சி.பி.எஃப்.சி. கவனத்தில் கொண்டுள்ளதாகவும், மக்களின் உணர்வுகளை புண்படுத்த எந்த வகையிலும் அனுமதிக்கமாட்டோம் எனவும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியிருந்தார்.
‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில் ‘சீதா தேவி இந்தியாவின் மகள்’ என்ற சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்காமல் திரையிடுவது சீராக்க முடியாத சேதத்தை ஏற்படுத்தும் எனக் கூறி நேபாளம் காத்மண்டு மற்றும் போக்ஹாராவில் தடை விதிக்கப்பட்டது. மேலும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தப் படம் முதல் 6 நாட்களில் 410 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், இரண்டாவது நாள் 100 கோடி ரூபாயும் வசூலித்திருந்தது.
வசூல் சாதனைகள் ஒருபுறமிருந்தாலும் படத்திற்கான எதிர்ப்புகளும் ஒருபுறம் கடுமையாகவே இருந்தது. அதில் ஒன்றாக, அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் கதை, வசனங்கள் மற்றும் ராமர், அனுமர் ஆகிய கடவுள்களின் உருவத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இந்துக்கள் மற்றும் சனாதன தர்மத்தின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது. திரையங்கிலும் ஓடிடி தளத்திலும் இப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டுமென கடிதம் எழுதப்பட்டது.
அதேபோல் இந்து சேனா அமைப்பும் டெல்லியில் பொதுநல மனுத்தாக்கல் செய்தது. இந்து கலாச்சாரத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் ஆதிபுருஷ் திரைப்படம் அமைந்திருப்பதாகவும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய மனோஜ் முன்டஷிர் தான் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆதிபுருஷ் படத்தால் மக்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனது சகோதர சகோதரிகள், பெரியோர்கள், மரியாதைக்குரிய முனிவர்கள் மற்றும் ஸ்ரீராமரின் பக்தர்கள் அனைவருக்கும், நான் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இறைவன் பஜ்ரங் பாலி நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. பிரபு பஜ்ரங் பாலி எங்களை ஒற்றுமையாக வைத்து, நமது புனிதமான சனாதனுக்கும், நமது மகத்தான தேசத்துக்கும் சேவை செய்ய பலம் தரட்டும்” என தெரிவித்துள்ளார்.