உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த நடிகை பூனம் பாண்டே கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நாஷா எனும் பாலிவுட் படத்தின் மூலம் திரைத்துறையில் என்ட்ரி ஆனார். அதனைத்தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களையும் கொண்டுள்ளார்.
இந்நிலையில், கர்ப்பப்பை புற்றுநோயால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் ஒருவர் இன்று காலை தெரிவித்தார். அத்துடன் பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழந்ததாக பதிவிடப்பட்டது.
இதற்கிடையே, அவரது உயிரிழப்புக்கு பிறகு அவரது குடும்பத்தினர் யாரையும் தொடர்புகொள்ள முடியாததால் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
"பூனம் பாண்டே உயிரிழந்த செய்தியை, அவரது உறவினர் ஒருவரே கூறியுள்ளார். ஆனால், இன்ஸ்டாவில் பதிவிட்டதற்கு பிறகு அவரது குடும்பத்தினரை தொடர்புகொண்டபோது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. சரி, மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு அழைக்கலாம் என்று பார்த்தபோது, அவர்களது செல்ஃபோன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் தொடர்புகொள்ள இயலவில்லை. இதனால் குழப்பமான சூழல் நிலவுவதாக தங்களுக்கு தகவல் கொடுத்தவர் கூறியதாக" இண்டியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பூனம் பாண்டேவின் இறப்பிற்கு பிறகு அவரது அணியினருக்கும் உறவினர்கள் சார்பாக தகவல் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் தொடர்புகொள்ள முயன்றபோது, குடும்பத்தினரின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாக கூறுகின்றனர். அடுத்தகட்ட தகவலுக்காக காத்திருக்கிறோம். குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடிந்தால், அடுத்தகட்ட நடவடிக்கை, நிலவரம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பதாகவும் பூனம் பாண்டேவின் அணியினர் கூறியுள்ளனர்" என்றும் இண்டியா டுடே செய்தியில் குறிப்பிட்டுள்ளது. நடிகையின் உயிரிழப்புக்கு பிறகு அவர்களது குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடியாத சூழல் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக தெரிகிறது.