திருவள்ளூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்களுடன் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்துரையாடினார்.
கர்நாடகா, ஒடிசா மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் திருவள்ளூரில் மனநல ஆலோசனை தொண்டு நிறுவனத்தை பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கினார். இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் இன்று அவர் கலந்துரையாடினார். கிராமப்புறங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் சார்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கிராமபுற ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர்களுடன் அப்போது அவர் கலந்துரையாடினார்.
இதுவரை இந்த தொண்டு நிறுவன அமைப்பு மூலம் 6 ஆயிரத்து 296 நபர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 2027-ம் ஆண்டுக்குள் 40 ஆயிரம் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்களில் அதாவது 7-இல் 1 நபர், மனநல சிக்கலால் பாதிக்கப்படுவதாகவும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களுடன் தீபிகா படுகோனே புகைப்படம் எடுத்துக் கொண்டார்.