நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக இறங்குவதற்குள் கடைசியாக 2 படங்களில் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. அதன்படி அவரின் 68-வது படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த GOAT (THE GREATEST OF ALL TIME) திரையரங்கில் வசூல்வேட்டை நடத்தியது.
நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, த்ரிஷா (கேமியோ), தோனி மற்றும் தல அஜித் ரெஃபரன்ஸ் என GOAT படமானது முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்காக விஜயை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விஜயின் சினிமா வாழ்க்கையின் கடைசி படமாக கூறப்படும் 69-வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேவிஎன் புரொடக்ஷன் கம்பெனி செப்டம்பர் 14-ம் தேதி அறிவித்தது.
படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விஜயின் 69வது படமானது ஹெச் வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது.
அதேநேரத்தில் அந்த அறிவிப்பானது “ஜனநாயத்தின் தீபம் ஏற்றுபவர் (The torch bearer of Democracy)" என்ற டேக்லைனுடன் வெளியான நிலையில், கடைசி படத்தில் ஏதோ பெரிய சம்பவம் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் படத்திற்கான முக்கிய அப்டேட்டாக படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களை இன்றிலிருந்து ரிவீல் செய்வதாக படக்குழு அறிவித்தது. அதன்படி தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது.
வெளியாகியிருக்கும் அப்டேட்டின் படி, படத்தில் இணையும் முதல் நபராக பாபி தியோலின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோல், அடுத்து தமிழ் படமான சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில் இணைந்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஜயின் 69வது படத்திலும் இணையவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.