அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள 'தாண்டவ்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜவினர் மும்பையில் உள்ள அமேசான் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அமேசான் ப்ரைமில் வெளியான வெப் சீரிஸ் ‘தாண்டவ்’. சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த வெப் சீரிஸில், ஹிந்து மதத்தை தவறாக சித்தரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து பாஜக எம்.எல்.ஏ வான மனோஜ் கோடக் ‘தாண்டவ்’ வெப் சீரிஸை தடைசெய்ய வேண்டும் என மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார். மற்றொரு பாஜக தலைவரான ராம் கடம் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார். மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகமும் அமேசான் தளத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டது.
இதனைத்தொடர்ந்து படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் , கதாசிரியர் கௌரவ் சொலாங்கி, தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ணா உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது தாண்டவ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜவினர் மும்பையில் உள்ள அமேசான் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.