அவமரியாதையாக நடந்தவருடன் நான் ஏன் வேலை செய்ய வேண்டும்?- மனிஷா யாதவ்

இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின்போது இயக்குநர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வலைபேச்சு பிஸ்மி கூறியிருந்ததற்கு இயக்குநர் சீனு ராமசாமியும்,நடிகை மனிஷா யாதவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிஸ்மி - சீனு ராமசாமி - மனிஷா யாதவ்
பிஸ்மி - சீனு ராமசாமி - மனிஷா யாதவ் pt web
Published on

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து பேசியதில் இருந்து அது குறித்தான பேச்சுவார்த்தை தொடர்ந்து இணையத்தில் நடந்த வண்ணமே உள்ளது. பலரும் பல நடிகர்களைக் குறிப்பிட்டு, “அப்போதும் இது குறித்து பேசி இருக்க வேண்டும்” என பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வலைபேச்சு பிஸ்மி பிரபல தனியார் யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது, “மனிஷா யாதவ்னு ஒரு நடிகை. ‘இடம் பொருள் ஏவல்‘ எனும் ஒரு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடக்கிறது. சீனு ராமசாமிதான் இயக்குநர். கொடைக்கானலில் சூட்டிங். அவர்கள் சூட்டிங்கிற்கு சென்றுவிட்டார்கள்.

அங்கு சீனு ராமசாமி அந்த நடிகைக்கு மிகப்பெரிய டார்ட்சரைக் கொடுத்து, அவர் கண்ணீர் விட்டுக் கதறி இறுதியில் ஒரு வாரத்திற்கு மேல் அவரால் அந்தப்படத்தில் நடிக்க முடியாமல் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டார்.

போன் செய்து எங்களிடம் சொன்னார். அவரது மொத்த வாக்குமூலமும் என்னிடம் உள்ளது. மாமனிதன் எனும் படம் எடுத்தவரது இன்னொரு முகம் இதுதான். அவர் ஒருகட்டத்தில் சினிமாவே வேண்டாம் என சென்றுவிட்டார்” என தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு வைரலானது. இந்த சூழலில் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,

“வணக்கம்,

நான் சந்திக்காமலேயே

அலைபேசியில் கூட உரையாடல் செய்யாமல் என்னைப் பற்றிய அவதூற்றின் வேரை பிடுங்கிய குமுதம் நிறுவனத்திற்கும் அதன் தலைமைக்கும் நெஞ்சார்ந்த அன்பு,

நன்றி.

என் திரைப் படங்களில்

நான் நீக்கிய ஆண் கலைஞர்களின்

பட்டியல் ரொம்ப நீளமானது

தொழில் நுட்ப வல்லுநர்களும் சேர்த்து

அதிர்ச்சியானதும் கூட

அட்வான்ஸ் கொடுத்த பின்னும்

அந்த விபத்து நடந்திருக்கிறது.

தவிர்க்க முடியாமல்?

அதில் பெண்கள் மிக மிக குறைவு ஆனால்

ஆண்களை விட பெண்கள் இப்பவும் மகத்தானவர்கள்.

ஒரு சூழலில் இணைந்து செயல் பட முடியாவிட்டாலும் மறு சூழ்நிலையில் அவர்களோடு இணைந்து பணிபுரியலாம்,

கோழிப்பண்ணை செல்லதுரை

படப்பிடிப்பில் இருக்கிறேன்.

இவ்வருடம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதப் போகும் என்

மூத்த மகளுக்கு ஒரு ஆங்கில கவிதை தொகுப்பும்

ஒரு சிறந்த படத்தையும் பரிசாக தர

மனதில் உறுதி ஏற்றேன்.

கவிதை நூல் வந்து விட்டது

படமும் விரைந்து வரும்..

தேனியின்

வானிலை சிறப்பாக இருக்கிறது.

அது நடக்கும் என நம்புகிறேன்.

அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனிஷா யாதவும் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நான் சீனு ராமசாமியின் எந்த திரைப்படத்தில் நடித்திருந்தேன். இதை நான் முதல்முறையாகக் கேட்கிறேன். ஒரு குப்பைக் கதை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவர் வந்திருந்தபோது, மேடையில் உள்ள அனைவருக்கும் நன்றி சொன்னதுபோல் அவருக்கும் சொன்னேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

9 வருடங்களுக்கு முன் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்மையாக இருக்கிறேன். ஒருமுறை என்னோடு அவமரியாதையாக நடந்தவருடன் நான் ஏன் மீண்டும் வேலை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com