‘சர்கார்’,‘மெர்சல்’ போல ‘பிகில்’ திரைப்படத்தில் அரசியல் வசனங்கள் இருக்காது என தகவல் வெளியாகியுள்ளது.
‘தெறி’,‘மெர்சல்’ ஆகிய படங்களுக்குப் பின் இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் முழுவதுமாக முடிவடையும் எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புகைப்படங்கள் வெளியாகின. நடிகர் விஜய் தனது முந்தைய படங்களான ‘சர்கார்’,‘மெர்சல்’ போல ‘பிகில்’ படத்திலும் அரசியல் வசனங்கள் பேசுவார் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் ‘பிகில்’ படத்தில் அரசியல் வசனங்கள் எதுவும் இடம்பெறாது என வசனகர்த்தா ரமணகிரி வாசன் தெரிவித்துள்ளார்.
‘பிகில்’ படம் மூலம் ரமணகிரி வாசன் மூன்றாவது முறையாக அட்லியுடன் இணைந்துள்ளார். ‘பிகில்’ படம் குறித்து பேசிய ரமணகிரி வாசன், ‘சர்கார்’, ‘மெர்சல்’ போல பிகிலில் அரசியல் வசனங்கள் இருக்காது. அப்பா, மகனாக இதுவரை பாத்திராத விஜயை ரசிகர்கள் பார்ப்பார்கள். விவேக், யோகிபாபுவின் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.