இந்த வாரம் தொடங்கியபோதே வைல்ட்- கார்ட் எண்ட்ரி கொடுத்த ஐவரும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள்.
உள்ளே வந்த வைல்ட்- கார்ட் எண்ட்ரி உறுப்பினர்களை சப்பைக்கட்டுகட்டி ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள் பழைய போட்டியாளர்கள். அடுத்து வந்தது நாமினேஷன் புராசஸ். “ரவீனா தனியா ஆடுனா சிறப்பா இருக்கும். அதற்கு மணி வெளியே போகணும்” என்றெல்லாம் நாமினேஷன் நடைபெற்ற நிலையில், இறுதியில் இந்த வாரம் எவிக்ஷன் பிராசஸ் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள்... தினேஷ், அர்ச்சனா, அன்னபாரதி, பிராவோ, பாலா, மணி, அக்ஷயா, ஐஷு மற்றும் மாயா.
ஷாப்பிங் செய்யும் நேரம் வந்தது. இங்கு ஒரு ட்விஸ்ட் வைத்தார் பிக்பாஸ். அதாவது இதில் ஸ்மால் வீட்டார்தான் ஷாப்பிங் செல்ல முடியும். அப்படி அவர்கள் கொண்டுவரும் பொருட்களை, பிக்பாஸ் வீட்டில் ஒப்படைத்துவிட வேண்டும் என்று புதிய கட்டளை. இதனாலும் கொஞ்சம் சலசலப்பு வந்துசென்றது.
புதிய வரவுகளை எப்படி வெளியேற்றுவது என்றெல்லாம் தந்திரம் தீட்டுகிறார்கள் பழைய உறுப்பினர்கள். இதில் அதிகம் அடிவாங்கியது விஜே அர்ச்சனாதான். ரொம்ப சென்சிடிவாக இருந்த அவரால், இந்த போட்டி பொறாமைகளை டக்குனு எடுத்துக்கொள்ள முடியவில்லை போல. அழுதார், புலம்பினார், பொறுமினார்... என்னென்னவோ செய்துபார்த்தார். ம்ஹூம்! இன்னும் பாக்க வேண்டியது என்னென்னவோ இருக்கு... இதுக்கே இப்படியாம்மா?
பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என இருவீட்டாரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருக்கையில் வேளையில் அர்ச்சனாவுக்கும் குடும்பத்தினரிடையே பேச்சு முற்ற, “புதிய உறுப்பினர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பியது எல்லாம் பிளான் பண்ணிதான் அனுப்புறீங்களா?” என்று குழந்தைத்தனமாக கேட்டார் அர்ச்சனா. பதிலுக்கு மாயாவும் பூர்ணிமாவும் அர்ச்சனாவிடம் பதில் விவாதம் செய்யவே மனமுடைந்த அர்ச்சனா, அழவே ஆரம்பித்துவிட்டார்.
ஒருகட்டத்தில் “கொஞ்சம் மனித நேயத்துடன் விளையாடுங்கள்” என்று பேசி சென்றுவிடுகிறார். வைல்ட்-கார்டில் வந்தவர்கள் விளையாட்டை இன்னும் தொடங்கவே இல்லாத நிலையில் அவர்களை இவர்கள் ஓங்கட்டுவது கொஞ்சம் ஓவர்தான்!
அடுத்தகட்டமாக வீட்டுப்பணிக்கான டாஸ்க் 1 ஆரம்பித்தது. அதில் தோற்றவர்கள் வீட்டை துடைக்க வேண்டும் என்று பிக்பாஸ் கட்டளையிடவே, இறுதியாக இப்போட்டியில் பிக்பாஸ் டீம் வெற்றி பெற்று விடுகின்றனர். இதனால் ஸ்மால் பாஸ் வீட்டினர் வேலையை தொடங்கினர்.
அடுத்து வீட்டு பணி டாஸ்க் 2 நடக்க, இந்த போட்டியிலும் பிக்பாஸ் டீம்தான் வெற்றி பெறுகின்றனர். ஸ்மால் பாஸ் டீமிற்கு கூடுதல் பணி!
இதற்கிடையில் பிரதீப் அக்ஷயாவிடம் “நீ எதற்கும் பிராவோவிடம் பேசி பழகு. அப்போதான் அவன் இந்த வீட்டிற்கு வந்தால் சமையல் செய்ய அவனை பயன்படுத்தி கொள்ள முடியும்” என்றார். இன்னும் ஏடாகூடமான ஐடியாக்களையும் கொடுத்தார் பிரதீப்.
அக்ஷயா முதலில் முடியாது என்றுவிட்டார். இருந்தபோதிலும் பிராவோவிடம் நல்ல நட்பையே சம்பாதித்தார்! எங்கும் போய் முடியாமல் இருந்தால் சரியென்றாகிவிட்டது நமக்கு.
அடுத்ததாக அசைஞ்சா போச்சு என்ற டாஸ்க் வைக்கப்பட்டது. காண்டாமிருகத்தின் ஒற்றைக் கொம்பு போல ஒரு கொம்பும், அதன் நுணியில் ஒரு மணியும் வடிவமைக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு தரப்பட்டது. பஸ்ஸர் அடித்தவுடன் மணியின் சத்தம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மணி அடித்து சத்தம் வந்து விட்டால் அவர் அவுட். இப்படி அவுட் ஆனவர்கள், மற்றவர்களைத் தொடாமல் தொந்தரவு செய்து அவர்களை அவுட் ஆக்க முயற்சிக்கலாம்.
முதல் சுற்றின் முடிவில் மாயா, 2 ஆம் சுற்றில் கூல் சுரேஷ் - நிக்சனும், 3-வது சுற்றில் பிரதீப் கானா பாலா, பூர்ணிமா, மணி, ரவீனா, விஷ்னு, அன்னபாரதி ஆகியோரும் வெளியேற்றபட்டனர். இதில் தான் சரியாக விளையாடியாதாக பிரதீப் தனது வாதங்களை முன்னெடுத்து வைக்க ஆரம்பித்தார்.
இதனால் கூல் சுரேஷூக்கும் பிரதீப்புக்கும் வாக்குவாதம் முற்றவே, ஒருகட்டத்தில் கெட்ட வார்த்தை பேச ஆரம்பித்துவிட்டார். இதனால் கோபமடைந்த கூல் சுரேஷ் தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே செல்லத்தொடங்கிவிட்டார்.
இதற்கிடையில் பிக்பாஸ் “போட்டியில் இருந்து வெளியேறும் நபர்களின் பெயர்களை மீண்டும் கூறுங்கள்” என்று மாயாவிடம் கேட்கவே, அதில் பிரதீப்பின் பெயர் இடம் பெறுகிறது. ‘சக போட்டியாளர்கள்தான் யார் அவுட் என சொல்லவேண்டும்’ என்று விதி இருந்ததால், அதை மீறி பிரதீப்பால் எதுவும் செய்ய முடியவில்லை.
இதனால் கூல் சுரேஷை பார்த்து ஆவேசமாக கத்த ஆரம்பித்த பிரதீப், “இப்போதே இந்த வீட்டை விட்டு போயிடு. உன்னையெல்லாம் அண்ணனாக நினைத்ததற்கு என்னைத்தான் அடிக்கணும். ஏய் போயா.. இப்போவே வீட்டை விட்டு” என்றார்!
“என் தாய் மீது ஆணையா சொல்கிறேன். நீங்க எல்லாரும் என்னை எவ்வளவோ பேசி இருக்கிறீர்கள். ஆனா நான் அதற்கு பதிலா எதுவும் பேசுனதில்ல. ஆனா இப்போ போறேன்” என்பது போல உச்சகட்ட சத்தத்தில் பேச ஆரம்பிக்கவே, கொஞ்ச நேரம் களேபரமானது. பின் சக போட்டியாளர்கள், “உண்மையாவே பிக்பாஸ் கதவை திறந்துவிட்டுருவாருண்ணே” எனக்கூறி அவரை உள்ளே அழைத்துவந்துவிட்டனர்.
மீண்டும் மீதியிருந்தவர்களுக்கிடையே போட்டி தொடங்கியது. இதில் தினேஷ், ஜோவிகா, பிராவோ அவுட் என்று கேப்டன் பூர்ணிமா கூறவே அவர்களும் வெளியேறினர். இறுதியில் கடைசியாக வெளியேறியது விசித்திரா என்பதால் இப்போட்டியில் வெற்றி பெற்றது விசித்திராவாக அறிவிக்கப்பட்டு அவருக்கு கோல்டன் ஸ்டார் வழங்கப்பட்டது.
இதற்கிடையில் பிரதீப்புக்கும் கூல் சுரேஷ்கும் இடையில் மீண்டும் தொடங்கியது வாக்குவாதம். ஒருகட்டத்தில் “நீ வெளியே போடா, என்னடா உனக்கு மரியாதை?” என்று கத்த ஆரம்பித்துவிட்டனர். பலத்த சத்தத்தை கேட்ட வீட்டின் மற்ற உறுப்பிறுப்பினர்களும் பதறிஅடித்து கொண்டு ஓடிவரவே, நடுவில் வந்தார் விஷ்ணு.
விஷ்ணு, “டேய் நீ வெளியே போடா” என்று கூறவே பிரதீப்பும் “டேய் நீ போடா வெளியில” என்று கூறி கத்த ஆரம்பித்துவிட்டார். என்னப்பா ஆளாளுக்கு வெளிய போகச்சொல்லி போட்டி போடறீங்க என்றாகிவிட்டது நமக்கு.
ஆத்திரத்தில் பிரதீப் கூல் சுரேஷ் ஐ பார்த்து “சில்ற பயலே, அப்படித்தாண்டா பேசுவேன். அப்படித்தான் பேசுவேன்” என்று அநாகரீகமாக பேச ஆரம்பிக்கவே, கூல் சுரேஷூம் “என்னை தூக்குவாராம் இவரு. டேய் முடிஞ்சா தூக்குடா. செருப்பால அடிப்பன்னு சொன்னியே அடிடா என்ன” என்று பதில் சவால் விடுகிறார்.
இடையில் வந்த ஜோவிக்கா, “நீ ஒருத்தர் மேல கை வெச்சுருக்க. இதற்கு நீ மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறவே “என்னால் இந்த தடவை மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” என்று பிடிவாதமாக பேசினார் பிரதீப்.
இப்படியாக பெரும் சண்டையில் போய் முடிந்தது நேற்றைய தினம்.