நடிகர் அஜய் தேவ்கனின் நடிப்பில் மார்ச் 30ம் தேதி ரிலீஸாகியிருந்தது போலா படம். தமிழில் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த கைதி படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்தது இப்படம். ரிலீஸான மறுநாள், சற்று சுமாரான வசூலை படம் குவித்த போதிலும், அடுத்த நாளில் இருந்து வசூல் கூடத்தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி மூன்று நாளின் முடிவில் (மார்ச் 30 - ஏப்ரல் 1) 30 கோடி ரூபாய் வரை போலாவுக்கு வசூலாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மூன்றாவது நாளில் மட்டும் ரூ. 12 கோடி வரை வசூல் கிடைத்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பொறுத்தவரை, இதன் இயக்குநரும் அஜய் தேவ்கன் தான். படத்தில் அவருடன் அமலா பால், தபுவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கே.ஜி.எஃப் புகழ் ரவிபஸ்ரூர் இதற்கு இசையமைத்திருந்தார்.
3டி தொழில்நுட்பத்தில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த இப்படம், முதல் நாள் வசூலில் ரூ. 11.20 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது நாள் முடிவில் மொத்தமாகவே ரூ. 18.60 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாவது நாள் வசூல், முதல் நாளைவிடவும் கிட்டத்தட்ட 35 % குறைந்த நிலையில், மூன்றாவது நாள் முடிவில் மீண்டும் உயர்ந்திருக்கிறது. இதனால் மொத்த வசூல் ரூ. 30.60 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
போலா படம், இந்த வருடத்தின் மூன்றாவது மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன் பதான், து ஜோதி மெயின் மகார் (Tu Jhoothi Main Makkaar) படங்கள் அதிகம் வசூலை குவித்ததாக கூறப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸ் இந்தியாவைப் பொறுத்தவரை, நேற்று (ஏப்ரல் 1) போலா படம் நல்ல லாபத்தைப் பெற்றது. அதிலும் பல மல்டிபிளக்ஸ்களில் வணிகம் முதல் நாளை விட அதிகமாக உள்ளது என தெரிகிறது.
முதல்நாளிலிருந்தே பாலிவுட்டில் நல்ல விமர்சனங்களை பெற்றபோதிலும், வசூல் இரண்டாவது நாளில் குறைந்ததாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது விடுமுறை நாட்களில் அது உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
படத்தின் விமர்சனத்தை இங்கே காண்க...