ஒபாமாவும் அவரது மனைவியும் தயாரித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது
சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களையும் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் 92-வது முறையாக நடைபெறும் ஆஸ்கர் விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்தில் நடித்த ஆக்கின் பீனிக்ஸ் பெற்றார்.
சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம் என 4 விருதுகளை பாராசைட் திரைப்படம் தட்டிச் சென்றது. 1917 திரைப்படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா அவரது மனைவி மிஷல் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஆவணப்படம், 'டாக்குமெண்ட்ரி ஃபீச்சர்' பிரிவில் ஆஸ்கர் வென்றுள்ளது.
'அமெரிக்கன் ஃபேக்டரி' என்ற இந்த ஆவணப்படத்தை ஜூலியா ரெய்ச்சர்ட் மற்றும் ஸ்டீவன் போக்னர் ஆகியோர் கூட்டாக இயக்கி இருந்தனர். நெட்ஃபிலிக்ஸ் இந்த திரைப்படத்தை வெளியிட்டது. அமெரிக்கன் ஃபேக்டரி திரைப்படம் விருது வென்றதற்கு ஒபாமா, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.