நாளை வெளியாக இருந்த நாடோடிகள்- 2 திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிகர் சசிக்குமார் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாடோடிகள். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் இரண்டாம் பாகமாக நாடோடிகள் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தையும் சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். சசிக்குமார், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை தயாரிப்பாளர் நந்தக்குமார் தயாரித்துள்ளார். இப்படம் நாளை வெளியாவதாக இருந்தது. இதனிடையே இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த மனுவில், நாடோடிகள் 2 படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார், பட தயாரிப்பு செலவுகளுக்காக தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாக 5 கோடியே 25 லட்சம் ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. பல தவணைகளாக, 3 கோடியே 50 லட்சம் பணம் தயாரிப்பாளருக்கு வழங்கிய நிலையில், வேறு நிறுவனம் மூலமாக படத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியிட தயாரிப்பாளர் நந்தகுமார் நடவடிக்கைகள் எடுத்து வருவதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
ஒப்பந்தை மீறி படத்தை வெளியிட முயற்சிப்பது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு அவர் மழுப்பலான பதில் அளித்ததாகவும், ஒப்பந்தப்படி மீதமுள்ள 1 கோடியே 75 லட்சம் அளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்க வேண்டும் எனவும் அதுவரை படத்தை வெளியிடுவதற்கான "கீ டெலிவரி மெசேஜ்" திரையரங்குகளுக்கு தர "கியூப்" க்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்காக "கீ டெலிவரி மெசேஜ்" தர கியூப் நிறுவனத்திக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பதில் அளிக்க பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.