’பாகுபலி’ பிரமாண்ட படம் என்றாலும் ’நான் ஈ’ படத்தில் பணியாற்றியதுதான் சவாலானது என்று ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார் கூறினார்.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார். ராஜமவுலின் பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர்.
பாகுபலி படத்தில் பணியாற்றியது பற்றி அவர் கூறும்போது, ’பாகுபலி படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ராஜமவுலி கதை சொல்வதில் மாஸ்டர். சினிமா பற்றிய அவர் பார்வை விசாலமானது. அவர் நினைப்பது கிடைக்காவிட்டால் விடமாட்டார். பாகுபலி மூலம் இந்திய சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். கடந்த 13 வருடங்களாக அவருடன் பணியாற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அவரிடம் பணியாற்றும்போது நிறைய கற்றுக்கொள்ள முடியும். பாகுபலி பிரமாண்ட படம் என்றாலும் ’நான் ஈ’ படம்தான் எங்களுக்கு சவாலாக இருந்தது. ஏனென்றால் பாகுபலி போன்ற படத்துக்கு ஏகப்பட்ட முன் உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் ’நான் ஈ’ படத்துக்கு இல்லை. அதிகமாக சிந்தித்து அந்தப் படத்தை உருவாக்கினோம். அதனால்தான் அதை சவாலானது என்கிறேன்’ என்றார்.