மறைந்த தனது அப்பாவின் கல்லறை புகைப்படத்தை வெளியிட்டு அதில் அப்பாவிற்கு செடிகள் மிகவும் பிடிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார் நடிகர் இர்ஃபான்கான் மகன் பாபில்.
நடிகர் இர்ஃபான்கான் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி உடல்நலக்குறைவால் தனது 53-வது வயதில் மரணமடைந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு, அவரது மூத்த மகன் பாபில் அவருடைய புகைப்படங்கள் மற்றும் தனது குடும்பம் பற்றிய தகவல்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் அவரது கல்லறையில் இருக்கும் செடிகளுக்கு இளையமகன் அயான் நீர் ஊற்றும் புகைப்படத்தையும், கல்லறையில் பூக்கள் படர்ந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். அதில் அப்பாவிற்கு செடிகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்பாவின் கல்லறையில் செடிகள் படர்ந்து மூடியிருப்பது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில், அப்பாவிற்கு செடிகள் மிகவும் பிடிக்கும் என்பதைப் பற்றி ஏற்கெனவே அம்மா எழுதியிருந்தார். அதில், ‘’எங்கள் இஸ்லாமிய கலாச்சாரத்தில் பெண்கள் கல்லறைக்குச் செல்ல அனுமதி கிடையாது. ஆனால் நான் என் கணவரின் நினைவுக்கல் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தில், அவருக்கு விருப்பமான பொருட்களை புதைத்ததுடன், இரவு நேரத்தில் பூக்கும் சில பூச்செடிகளையும் நட்டு வைத்துள்ளேன். மேலும் அவரை புதைத்த இடத்தை சொந்தமாக வாங்கிவிட்டேன். எனவே யாரும் இப்போது என்னை கேள்விகேட்கமுடியாது. அங்கு நான் பலமணிநேரங்கள் அமைதியாக செலவிடுவேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
நாங்கள் கல்லறையைச் சுற்றி இருக்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றிவிடுகிறோம். மழையால் நாங்கள் நட்டுவைத்த செடிகள் தற்போது வேகமாக வளர்ந்துவிட்டன. இந்த பருவம் முடிந்தவுடன் செடிகளை சமமாக்கி சுத்தப்படுத்துவோம்’’ என பாபில் குறிப்பிட்டிருக்கிறார்.