கலைக்கு ஏது மலையும் வனமும் தடை...! நஞ்சியம்மாவின் கையில் சேர்ந்த தேசிய விருது

கலைக்கு ஏது மலையும் வனமும் தடை...! நஞ்சியம்மாவின் கையில் சேர்ந்த தேசிய விருது
கலைக்கு ஏது மலையும் வனமும் தடை...! நஞ்சியம்மாவின் கையில் சேர்ந்த தேசிய விருது
Published on

கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் பலருக்கும் பலமொழிப் படங்கள் பார்ப்பது இயல்பான பொழுதுபோக்காக மாறியது. அப்படியாக தமிழ் ரசிகர்களுக்கு ஓடிடி வழியாக பரிச்சயமான மலையாள திரைப்படம்தான் "அய்யப்பனும் கோஷியும்'. பிருத்விராஜ், பிஜூ மேனன் நடிப்பில் சச்சி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் இந்திய அளவில் மொழிகளை தாண்டி பலராலும் ரசிக்கப்பட்டது. அதிலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு..” பட்டித்தொட்டி முழுவதும் பிரபலமானது. இந்தப் பாடலை பாடியவர் நஞ்சியம்மா, இவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இப்போது இவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

நஞ்சியம்மாள் இயல்பாகவே பாடலை நேசிக்கக்கூடியவர், விவசாயம், கால்நடைகளை மேய்த்தல் போன்ற இயல்பான பணிகளை அம்மலைப்பகுதிகளில் இன்னும் நடத்திவருகிறார். நஞ்சியம்மா பாரம்பரியமாக மனதில் இருப்பவற்றை மடைதிறந்த வெள்ளம்போல் பாடக்கூடிய திறன் கைவரப்பெற்றவர். தனது முதல் பாடலை அகுடு நாயக (மாத்ரு மொழி) என்னும் ஆவணப்படத்தில் பாடினார். இந்த ஆவணப்படத்தை சிந்து சாஜன் (Sindhu Sajan) என்னும் பெண் இயக்குநர் இயக்கினார்.

தமிழில் வார்த்தைகளும் உச்சரிப்பில் மலையாளமும் கலந்த “களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்கு..” பாடல் படத்தின் ஜீவநாதம் என்றே சொல்லலாம். நஞ்சியம்மாவை தேடி கண்டுப்பிடித்து பாட வைத்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய்க்கு ஒரு ராயல் சல்யூட். இந்தப் பாடல் மட்டுமல்ல படம் முழுவதும் அய்யப்பன் நாயர் வரும் காட்சிகளில் எல்லாம் பழங்குடியின பாடலையே பயன்படுத்தியிருப்பார் ஜேக்ஸ் பிஜோய். அதுவும், அய்யப்பன் நாயர் வரும்போதெல்லாம் பின்னணியில் ஒலிக்கும் "ஆஹா ஓஹோ புல்லே புல்லே" என்று வரும் பாடலும் நாட்டார் பாடல்களே.

கேரளாவின் அட்டப்பாடியில் வசிக்கும் தமிழ் பழங்குடியின பெண்ணான நஞ்சியம்மாவுக்கு சினிமா நடசத்திரங்கள் யாரும் பரிட்சயமே கிடையாது. அதனை இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவில் நடிகர் பிருத்விராஜ் உடன் அவர் உரையாடும்போது தெரிந்துக்கொள்ளலாம். இந்தப் பாட்டு குழந்தைகளுக்கு வானத்தை காட்டி சோறூட்டும்போது பாடப்படும் பாடல் என்றும், இதன் மெட்டு எங்களது முன்னோர்களுக்கு சொந்தமானதும் என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் நஞ்சியம்மாள்.

அதேபோல இப்படத்தில் நேர்மையான காவல் அதிகாரியாக அய்யப்பன் நாயர் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்த பிஜூ மேனனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்திருக்கிறது. மேலும் சிறந்த சண்டை பயிற்சிக்கான விருதும் கிடைத்திருக்கிறது. இத்திரைப்படத்தை இயக்கிய சச்சிதானந்தன் இப்போது உயிரோடு இல்லை. அவருக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது. இயக்குநர் சச்சி இப்போது உயிரோடு இல்லாததை சோகத்துடன் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் பிருத்விராஜ். ஆனால் நஞ்சியம்மாவுக்கு ஏற்கெனவே கேரள அரசு கொடுத்த சிறப்பு விருதை, இயக்குநருக்கு சமர்பித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com