இந்திய அளவில் கவனத்தையும் பாராட்டுக்களையும் குவித்த ’ஆர்டிகிள் 15’ பட இயக்குநர் அனுபவ் சின்ஹாவும், அப்பட நாயகன் ஆயூஷ்மான் குரானாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.
சாதி, மதம், இனம், மொழி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பிப்பதை தடை செய்யும் இந்திய அரசியலமைப்பின் பிரிவே ’ஆர்டிகிள் 15’. இதனை மையப்படுத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘ஆர்டிகிள் 15’ இந்தியளவில் பாராட்டுக்களைக் குவித்த மிக முக்கியமான படம்.
ஏழைச்சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்படுவதும், அதனை விசாரிக்கும் அதிகாரிக்கு, சாதிய உணர்வுகொண்ட காவலர்களாலேயே சாதியின் பெயரால் தடங்கல்கள் வருவதும், அதனை அந்த அதிகாரி முறியடித்து நடவடிக்கை எடுப்பதுமே ஆர்ட்டிகிள் 15 திரைப்படத்தின் கதை. சாதியத்திற்கும் சாதியவாதிகளுக்கும் எதிராக சினிமா மூலம் சாட்டையை சுழற்றியிருந்தார், இதன் இயக்குநர் அனுபவ் சின்ஹா.
இப்படத்தில், மனிதாபிமான காவல்துறை அதிகாரியாக நடித்த ஆயுஷ்மான் குரானாவுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் அதிகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைக் குவித்த இப்படத்தில் நடிகர் நாசரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதன், ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கியுள்ளார். தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்கவிருக்கிறார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது.
ஆயூஷ்மான் குரானாவும் அனுபவ் சின்ஹா கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் இணைந்துள்ளதை இன்று உறுதி செய்துளார் ஆயூஷ்மான் குரானா. ’அனேக்’ என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.