விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பங்குத் தொகை பிரிப்பதில் நிலவும் பிரச்சனை காரணமாக இந்தியாவில் ‘அவதார் 2’ திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘தி டெர்மினேட்டர்’, ‘ஏலியன்ஸ்’, ‘டைட்டானிக்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானப் படம் ‘அவதார்’. சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம், சினிமா உலகை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. 23.7 கோடி அமெரிக்க டாலர்களில் உருவான இந்தப் படம், சுமார் 284.72 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டி, திரைப்பட வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியது.
இதனைத் தொடர்ந்து சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘அவதார் 2’ திரைப்படம், ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ (Avatar: The Way of Water) என்ற பெயரில் வருகிற 16-ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளநிலையில் இந்தியாவில் படத்தை இந்தியாவில் சில மாநிலங்களில் வெளியீடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
காரணம் என்னவெனில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதில் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் படத்துக்கு முதல் வாரத்தில் தங்களுக்கு தரப்படும் பங்குத் தொகையை விட 5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை அதிகமாக தரவேண்டும் என விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது 60 முதல் 65 சதவிகித வசூல் தொகையை விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் வழக்கப்படி 55 சதவிகித வசூலைத்தான் கொடுக்க முடியும் என திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியாக கூறி விட்டதாகத் தெரிகிறது. ஆனால் விநியோகஸ்தர்கள் தரப்பில் கறாராக அதிக தொகை கேட்பதால், இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதனால் கேரளா, தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் ‘அவதார் 2’ படத்தை வெளியிடப் போவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியாக இன்னும் 10 தினங்களுக்கு மேல் இருப்பதால், இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் ‘அவதார் 2’ படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.