அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு அசுரன் படம் தேர்வாகியுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்திய அரசின் திரைப்படத்துறை (IFFI) சார்பில் வருடம்தோறும் நடத்தப்படும் ’கோவா சர்வதேச திரைப்பட விழா’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை நடக்கவிருந்த நிலையில் கொரோனா சூழலில் உலக நாடுகளின் இயக்குநர்கள், நடிகர்கள் என்று பலரும் வருவதற்கு சிக்கல் எழும் என்பதால் கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16 ஆம் தேதிமுதல் 24 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவித்தார்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் வெகுஜன பிரிவில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட தேர்வாகியுள்ளது. இந்தப் படம் சாதிய மனநிலையை மிகக் கடுமையாக சாடி எடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வருடம் வெளியான படங்களில் அசுர வசூலைக் குவித்தது அசுரன். தற்போது, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
அசுரன் படத்தோடு கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள விரைவில் திரையில் வெளியாகவிருக்கும் ’தேன்’ படமும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவில் வெளியிட தேர்வாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.