1992-ல் கே.பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனமான ‘கவிதாலயா’, மணிரத்னத்தின் ‘ரோஜா’ படம் மூலம் இளைஞர் ஒருவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தது. "சின்னச் சின்ன ஆசை", "காதல் ரோஜாவே", 'புது வெள்ளை மழை'', "தமிழா தமிழா" என திரும்பும் திசையெல்லாம் ரோஜா பாடல்கள் எதிரொலித்தன. யார் இந்த இசையமைப்பாளர் என்று பலரும் முனுமுனுத்தனர்.
இசையில் ஏதோ ஒரு புதுமையை உணர்ந்த ரசிகர்கள் ஒலிகோர்த்த விரல்களை தேடத்தொடங்கினர். இசையைப் போலவே அவரின் பெயரும் காற்றில் பரவியது. அவர் ஏ.ஆர்.ரகுமான். காற்றுக்கு ஏது எல்லை என்பது போலவே எல்லையின்றி இசையால் பயணம் செய்தவர் ரகுமான்.
‘ஜென்டில்மேன்’, ‘புதிய முகம்’, ‘உழவன்’, ‘திருடா திருடா’, ‘டூயட்’, ‘காதலன்’, ‘கிழக்குச் சீமையிலே’ என அடுத்தடுத்த ஹிட் ஆல்பங்கள் ரகுமானுக்கு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. தன் முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கிய ரகுமானுக்கு அதற்கு பின் விருதுகள் குவிந்து வண்ணமே இருக்கின்றன. 2009-ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லியனர்" படம் மூலம் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். ஆஸ்கருக்கு முன்பாகவே "கோல்டன் குளோப்", மற்றும் கிராமி விருதுகளையும் பெற்று அசத்தினார் ரகுமான்.
மொழி, எல்லை வித்தியாசமின்றி இசையால் இன்று உலகை வலம் வரும் ரகுமான் ஆரம்ப காலங்களில் வறுமையில் சிக்கித் தவித்தவர். 25 வயது வரை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திலேயே இருந்தேன் என ரகுமான் தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். தன் தந்தை இறந்த பிறகு வெறுமையே மிஞ்சியிருந்தது. என்னென்னமோ நடந்தது. நாங்கள் நன்றாக இல்லை என்பதை தெளிவாக உணர முடிந்தது. . அந்த வாழ்க்கை முறைதான் எனக்கு மிகுந்த தைரியத்தையும் கொடுத்தது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க தொடங்கி, பதினொரு வயதில், இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிக்க சேர்ந்து, எம்.எஸ்.வி, ரமேஷ் நாயுடு, மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசைக் கலைஞர்களிடமும் பணியாற்றி, கிளாசிக்கல் இசைத்துறையில் இசைப் பயின்று பட்டம் பெற்று என ரகுமான் கடந்து வந்த பாதை இன்றுள்ள இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வாழ்க்கை அனுபவம்.
வயதில் 52 ஆண்டுகள், திரையுலகில் 27ஆண்டுகள் என ரகுமானுக்கு காலங்கள் கணக்கு சொன்னாலும், தன் முகத்திலும், இசையிலும் என்றும் இளமை ததும்ப வலம் வருகிறார் ரகுமான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரகுமானுக்கு பாடலாசிரியர் வைரமுத்து சொன்ன பிறந்தநாள் வாழ்த்து, ''உன் இதயம் - இசை இரண்டுக்கும் வயது எப்போதும் 18 ‘இளமை இனிமேல்’.
காலங்கள் ஓடட்டும். நீங்கள் இப்படியே இருங்கள் ரகுமான். எப்போதும் 18 போல. பிறந்தநாள் வாழ்த்துகள் ஏ.ஆர்.ரகுமான்.