ஒரு நடிகனுக்கு ராணுவ உடையை அணிவது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய கெளரவம் என்று பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
’அறிந்தும் அறியாமலும்’, ’பட்டியல்’, பில்லா, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய விஷ்ணு வர்தன், தற்போது பாலிவுட்டில் ‘ஷெர்ஷா’ படத்தை இயக்கி முடித்துள்ளார். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றைத்தான் படமாக இயக்கியுள்ளார். அந்தப் படம் அண்மையில் அமேசான் பிரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா "ஷெர்ஷா" படத்தில் விக்ரம் பத்ரா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் விக்ரம் பத்ராவாக வாழ்ந்த சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இது குறித்து தன்னுடைய எண்ணங்களை ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார் சித்தார்த். அதில் "விக்ரம் பத்ராவின் கதாப்பாத்திரத்தில் நடித்தது எனக்கு மன நிறைவை தந்தது. ஒரு நடிகன் விக்ரம் பத்ராவின் கதாப்பாத்திரத்தில் ராணுவ உடையில் நடித்தது தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய கெளரவம்" என்றார்.
மேலும் பேசிய அவர் "விக்ரம் பத்ராவின் குடும்பத்தினரை சந்தித்து உணர்ச்சிபூர்வமான ஒரு பந்த்ததை அந்த கதாப்பாத்திரத்துடன் என்னை இணைத்தது. இது முழுக்க ஒரு கமர்சியல் படமல்ல. இந்தக் கதை அவர்களுடைய மகன், சகோதரனை பற்றியது. படம் முடிந்து அவர்கள் பார்த்ததும் விக்ரம் பத்ராவின் குடும்பத்தினர் என்ன விமர்சனம் வைக்கப்போகிறார்கள் என்பதை அறிய எனக்கு பயமாக இருந்தது. முக்கியமாக அவரின் பெற்றோர்கள். ஆனால் அவர்களுக்கு படம் பிடித்திருந்தது அதை அவர்கள் கண்கள் மூலம் தெரிந்துக்கொண்டேன். விக்ரம் பத்ரா போன்ற நிஜ ஹீரோக்களின் கதையில் நடித்ததுதான் எனக்கு மிகப்பெரிய அழுத்தமாக இருந்தது" என்றார் சித்தார்த் மல்ஹோத்ரா.