ஆப்கானிஸ்தான் அரசியல் பின்புலத்தில் தலிபான்களுடன் இந்துத்துவாவை ஒப்பிட்டு நடிகை ஸ்வரா பாஸ்கரின் கருத்தை அடுத்து, அவரை கைது செய்யக் கோரி நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்xறனர்.
பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், துணிச்சலாக தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். தனது அதிரடி கருத்துக்களால் அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். தற்போது அவர் தெரிவித்த கருத்து ஒன்று இணையத்தில் அவருக்கு எதிராக கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஸ்வரா பாஸ்கரை கைது செய்யக் கோரும் முழக்கங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகின்றன. 'ஸ்வரா பாஸ்கரை கைது செய்யுங்கள்' (Arrest Swara Bhasker) என்று வலியுறுத்தும் ஹேஷ்டேக் பெரிய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இந்த சர்ச்சைக்கு விதைபோட்டது ஸ்வரா பாஸ்கரின் ட்வீட். அதில், "தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது. அதேபோல் இந்தியாவில் இந்துவா தீவிரவாதமும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது" என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இந்தக் கருத்து வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் ஸ்வரா பாஸ்கரை எதிர்த்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், "அப்படி உங்களுக்கு இந்துத்துவா உடன், ஹிந்துஸ்தானில் வசிக்க பிரச்னையாக இருந்தால் பாகிஸ்தான், வங்காளதேசம், துருக்கி, குவைத், ஈராக் போன்ற அமைதியை விரும்பும் மக்களுடன் சென்று மகிழ்ச்சியாக வாழுங்கள்" என்றுள்ளார்.
அதேபோல் மற்றொரு பயனர் ``ஸ்வரா, நீங்கள் எந்த பயமும் இல்லாமல் வெளிப்படையாக என் மதத்திற்கு எதிராக ட்வீட் செய்கிறீர்கள், இந்துத்துவா பயங்கரவாதம் அல்ல என்பதற்கு இதுவே சாட்சி. ஒருவேளை இந்துத்துவா பயங்கரவாதமாக இருந்திருந்தால் இந்நேரம் உங்கள் தலை துண்டிக்கப்பட்ட போஸ்டரை நீங்கள் கண்டிருப்பீர்கள்" என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.
மற்றொருவர், ``ஸ்வரா பாஸ்கர் என் மதத்தை அவமதித்திருக்கிறார் மற்றும் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த செயல் பல இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது. இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக அவரை கைது செய்யுமாறு நான் மும்பை போலீஸை வேண்டுகிறேன்" என்றுள்ளார்.
இதேபோல், ``ஸ்வரா, உங்களுக்கு நிஜமாகவே தைரியம் இருக்கிறது என்றால் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று பர்தாவை அணிந்து கொண்டு ஒரு வாரம் இருந்து பாருங்கள், அப்போதுதான் இந்தியாவில் இருக்கும் சுதந்திரம் எந்த அளவுக்கு மேன்மையானது என்று உங்களுக்கு புரியும்" என்று இன்னொரு பயனர் காட்டமாக தெரிவித்துள்ளார். இப்படி ஸ்வரா பாஸ்கரை கைது செய்ய சொல்லி நெட்டிசன்கள் பெரிய அளவில் குரல் கொடுத்து வருகின்றனர்.
அதேபோல், மத அடிப்படைவாத கருத்துக்கள் என்ற அடிப்படையில் இருதரப்பிலும் உள்ள தீவிரமான போக்குகள் சிலவற்றை ஒப்பிட்டும் அவ்வவ்போது கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.