இந்திய திரையிசைத் துறையை உலகளவில் பெருமைப்படுத்திய பெரும் பங்கு இசைப்புயல் என அனைவராலும் அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பாடல்களை பிடிக்காதவர்களே அரிதுதான் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு எண்ணற்ற பாடல்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாகவே இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அவரது இசையில் உருவான பாடல்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு அதற்கு துளியளவும் குறையாத வரவேற்பு அவரது பின்னணி இசைக்கும் இருக்கும். சமகாலத்தில் இருக்கும் பெரும்பாலான இசையமைப்பாளர்களும் தாங்கள் இயற்றிய பாடல்களின் ஒரிஜினல் இசையை வெளியிட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கும் படங்களின் ஒரிஜினல் ஸ்கோர் எப்போது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் பலரும் பல நாட்களாக ஏக்கத்துடனேயே காத்துக் கிடக்கிறார்கள். அவர்களது ஏக்கத்துக்கும் காத்திருப்புக்கும் தீனி போடும் விதமாக ட்விட்டரில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி 99 சாங்ஸ், வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் - 1 ஆகிய படங்களின் ஒரிஜினல் ஸ்கோர்ஸ் 2023 ஜனவரி மாதத்திற்குள் வெளியிடப்படும் என ட்விட்டரில் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டிருந்தார்.
அப்போது, எந்திரன், ராவணன் போன்ற படங்களின் பேக்கிரவுண்ட் ஸ்கோர்களையும் வெளியிடுங்கள் என ரசிகர்கள் பலரும் கமெண்ட்டில் கேட்டிருந்தார்கள். இப்போது 2023ன் ஜனவரி மாதத்தின் 25ம் தேதியே வந்துவிட்டத்தை அடுத்து, “ThalaivARReh ஜனவரி மாதமே முடியப்போகுது. எப்போது ஒரிஜினல் ஸ்கோர்ஸ் வெளியிடுவீர்கள்” எனக் கேட்டு வந்தார்கள்.
இந்த நிலையில், “வெந்து தணிந்தது காடு மற்றும் கோச்சடையான் படங்களின் ஒரிஜினல் ஸ்கோர்ஸின் மாஸ்டர் காப்பி தொடர்புடைய மியூசிக் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டது” எனக் குறிப்பிட்டு இன்று காலை (ஜன.,25) ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் போட்டதை கண்டு ரசிகரகள் ஆரவாரத்தில் மூழ்கிப் போயிருக்கிறார்கள்.
அதேபோல, "மெர்சல், கோப்ரா, பிகில், கடல், மரியான், ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய படங்களின் OST-ஐயும் (Original Sound Track) வெளியிடுங்கள் ThalaivARReh" என்றும் கேட்டு வருகிறார்கள். இருப்பினும் ரஜினி நடிப்பில் உருவான கோச்சடையான் படத்தின் ஒரிஜினல் ஸ்கோர் வெளியாவதை அறிந்ததும் “ஸ்வீட் சர்ப்ரைஸ்” எனக் குறிப்பிட்டு குதூகலித்தும் போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.