கடந்த ஆண்டு மும்பையில் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தின் பத்தாம் ஆண்டு விழா நடைபெற்றது. அதில், ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவும் பங்கேற்றார். தந்தையோடு இவர் மேடையில் ஒரு உரையாடலையும் நடத்தினார். அப்போது கதிஜா அணிந்து வந்த பர்தா பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது
‘ரஹ்மான் பிற்போக்குத்தனமாக நடந்து கொண்டுள்ளார்’ எனப் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். உடனே அது பெரும் விவாதமாக மாறியது. இதற்கு ரஹ்மானின் மகள், ‘நான் எந்த உடையை அணிய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்’ எனக் கூறி விளக்கம் அளித்து விவாதத்தை முடித்து வைத்தார்.
இந்த நிகழ்வு முடிந்து இத்தனை மாதங்கள் ஆன பின்பு கடந்த வாரம் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின், “நான் ஆர்.ஆர்.ரஹ்மானின் இசையை முற்றிலும் விரும்புகிறேன். ஆனால், நான் அவரது அன்பான மகளைப் பார்க்கும்போது எல்லாம் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஒரு கலாச்சார குடும்பத்தில் படித்த பெண்களைக்கூட மிக எளிதாக மூளைச்சலவை செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று கூறியுள்ளார். ரஹ்மான் மகள் பர்தா அணிவது தொடர்பாகவே இவர் இந்தக் கருத்தைக் கூறியிருந்தார். இவர் இந்தப் பதிவை ட்விட்டரில் கூறியிருந்தார்.
இதற்கு ஏ. ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா, அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு விளக்கத்தைப் பதிவிட்டார். அதில் அவர், “ஒரு வருடத்திற்குப் பின்பாக மீண்டும் இந்த டாபிக் சுற்ற ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் எவ்வளவு நடக்கிறது. ஆனால், அனைத்து மக்களும் ஒரு பெண் அணிய விரும்பும் துண்டு உடை குறித்து கவனம் செலுத்துகிறார்கள். நிறைய விஷயங்களைச் சொல்ல விரும்புகிறது. என்னுடைய வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளை எண்ணிப் பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன், என்னைப் போலவே என்னை ஏற்றுக் கொண்டவர்களுக்கு நன்றி. நான் மேலும் சொல்ல விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.
இந்தச் சர்ச்சை குறித்து இதுவரை மௌனம் காத்து வந்த ரஹ்மான், முதன்முறையாக ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். ‘தி குயிண்ட்’ செய்தி தளத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில் இது குறித்து அவர் பேசியுள்ளார். ஆனால், விவரமாகப் பதில் தரவில்லை. “குழந்தைகள் எங்கள் கஷ்டங்களை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் எங்கள் பிரச்னைகளை அறிவார்கள். மரபார்ந்த வழியில் வளர்த்தால்தான் நல்லது என்று நான் நினைக்கிறேன். எங்களிடமிருந்து மரபார்ந்த நல்லதையும் கெட்டதையும் பெற வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். அவ்வளவுதான். அப்புறம் அவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. ஆகவே அவள் அதைச் செய்தாள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதிலை வெளியிடுவதற்கு முன் உங்கள் குடும்பத்தினருடன் மகள் விவாதித்தாரா எனக் கேட்டதற்கு ரஹ்மான், “இல்லை, அவளே அந்தப் பதிவைப் போட்டாள். பின்னர்தான் நான் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டேன் என்று நினைக்கிறேன். அவள் முக்காடு பின்னால் இருப்பது தேவை என்று நினைத்தேன், அதுவேதான் அவளது விருப்பம்” என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், புர்கா அணிவதில் காதிஜா தனது சுதந்திரத்தைக் காண்கிறார் என்றார். அதனையடுத்து அவர், “நான் நினைகிறேன் இது மத விஷயம் என்பதை விட, இது ஒரு உளவியல் விஷயம் என்று. இதை நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன். ஒரு ஆண் புர்கா அணியக் கூடாது, இல்லையெனில் நான்கூட ஒன்றை அணிவேன். அதை அணிந்து கடைக்குச் செல்வதற்கும். நிலையான வாழ்க்கையைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் எளிதானது. அது உங்களுக்கும் தெரியும். நான் நினைக்கிறேன், அவள் இதில் சுதந்திரத்தை உணர்கிறார்” என்று ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.