பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண், அந்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சிப்பதால் வரும் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே ஒன்லைன்.
மதி (ஆண்ட்ரியா) ஸ்போட்ர்ஸ் ஷோரூமில் வேலை பார்க்கிறார். சீக்கிரமே தன்னுடைய காதலரான சரணுடன் (ஆதவ் கண்ணதாசன்) திருமணம் நடக்க ஏற்பாடாகி இருக்கிறது. இந்த சூழலில் தன்னுடன் பணிபுரியும் பெண்ணின் திருமணத்திற்காக கொடைக்கானல் செல்கிறார் மதி. திருமணம் முடிந்து ஊர் சுற்றிப் பார்க்க செல்லும் மதி, மூன்று பேரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறார். தனக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் மதி. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனரா? அவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டதா? இதற்காக மதி சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன? என்பதுதான் ‘அனல் மேலே பனித்துளி’ படத்தின் மீதிக்கதை.
படத்தின் முதல் பலம், ஆண்ட்ரியா. தான் ஒரு திறமையான நடிகை என்பதை மறுபடி ஒருமுறை நிரூபித்திருக்கிறார். சக தொழிளாலர்களின் பிரச்சனைக்கு துணையாக இருப்பது, ஆதவ் கண்ணதாசனிடம் திருமணம் பற்றி பேசுவது என மென்மையான ஒரு முகம் என்றால், அந்த சம்பவத்திற்குப் பிறகு அப்படியே டிஸ்டர்ப்டான மனநிலையில் உழலும் பெண்ணாக இன்னொரு முகம் காட்டுகிறார். மிக பலவீனமாக மருத்துவமனை சென்று தனக்கு நேர்ந்ததைச் சொல்ல ஒரு பெண் மருத்துவர் இருக்கிறாரா எனக் கேட்பது, காவல் நிலையத்திற்கு சென்று அங்கு நடப்பவற்றை பார்த்து பதற்றமடைவது எனப்பல இடங்களில் அவரது திறமையான நடிப்பு தான் படத்தை மிக அழுத்தமானதாக மாற்றுகிறது.
அழகம்பெருமாள், இளவரசு ஆகியோரின் கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதமும், அவர்களின் நடிப்பும் மிகப் பொருத்தமாக இருந்தது. இவர்களுடன் துணைக் கதாபாத்திரங்களில் வரும் ஆதவ் கண்ணதாசன், அனுபமா, லவ்லின் ஆகியோரும் படத்திற்கு தேவையான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். அடுத்த பலம், இந்தப் படத்தை முடிந்தவரை சரியாக கொடுக்க வேண்டும் என இயக்குநர் கெய்சர் ஆனந்த் செலுத்தியிருக்கும் கவனம்.
உதாரணமாக ஆதவ் கண்ணதாசன், ஆண்ட்ரியாவுக்கு ஆறுதல் சொல்லும் காட்சியைக் கூறலாம். “மாத்திரை போட்டு தூங்கி எழுந்தா காலைல எல்லாம் சரியாகிடும்னு டாக்டர் சொன்னாங்கள்ல” என்றதும் ஆண்ட்ரியாவின் முகமே மாறிவிடும். பின்பு “எனக்கு இப்போ என்ன சொல்றதுனே தெரியல, ஆனா எப்பவும் உன் கூட இருப்பேன்” என்பார். அதேபோல பெண்ணுக்கு மானம், அவமானம் என்பது அவர்களது உடலில் தான் இருக்கிறது என்ற பொதுப்பார்வை மீது கேள்வியை எழுப்பியிருப்பதும் கவனிக்க வேண்டியது.
இவை இல்லாமல் இன்னும் இரண்டு வகையில் இந்தப் படம் மிக முக்கியமானது. ஒன்று செக்ஷுவல் அப்யூஸால் பாதிக்கப்படும் பெண்கள் அதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும், அதற்கு குடும்பத்தினரின் ஆதரவு மிக முக்கியம் என்பதைப் பேசியது. வழக்கமாக மானம், குடும்ப கௌரவம் எனப் பேசும் சினிமாக்களில் இது மாதிரியான முன்னெடுப்புகள் சமீபகாலமாக பார்க்க முடிகிறது. இன்னொரு முக்கியமான விஷயம், இது போன்ற ஒரு குற்றத்தை எமோஷனலாக அணுகி குற்றவாளியை கொலை செய்ய வேண்டும் என்பது மாதிரியான கருத்துகளை முன்வைக்காமல், சட்டப்படி தான் இதற்கான தீர்வை அணுக வேண்டும். அப்போதுதான் குற்றவாளியைப் பற்றி வெளியே தெரியும், அடுத்து இதுபோல செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயம் வரும் என்ற கருத்தை பதிவு செய்திருந்த விதம்.
தொழில்நுட்ப ரீதியாகவும் படம் தரமானதாக உருவாகியிருந்தது. வேல்ராஜின் ஒளிப்பதிவு ஆண்ட்ரியாவின் பயத்தையும் படபடப்பையும் அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறது. சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை, படத்தின் உணர்வுகளை ஆடியன்ஸுக்கு கடத்துகிறது.
படத்தின் குறை எனப் பார்த்தால், சில காட்சிகளில் இருக்கும் பிரச்சார நெடி. இது ஒரு அழுத்தமான கதை, இதனை எவ்வளவு இயல்பாக சொல்ல முடியுமோ அந்த அளவு பார்வையாளர்களை சென்றடையும். ஆண்ட்ரியாவுக்கு நடக்கும் கொடுமைகளை பதிவு செய்வதில் இருக்கும் இயல்பு, சில வசன காட்சிகளில் மிஸ்ஸாகிறது. உடன் பணியாற்றும் பெண்ணுக்கு ஆதரவாக, ஒரு இளைஞனிடம் பேசும் ஆண்ட்ரியா, “ஒரு பெண் வேண்டாம் என்று சொன்னப்பின்னும் அவளை துரத்தி துரத்தி வருவதுதான் சின்சியரா லவ் பண்றதா?” என்பதெல்லாம் கதையுடன் இயல்பாக பொருந்தி வருகிறது.
ஆனால் க்ளைமாக்ஸில் ஆண்ட்ரியாவும் - ஜட்ஜூம் பேசும் காட்சிகளில் அவ்வளவு செயற்கைத்தனம். அவர்கள் பேசும் விஷயம் முக முக்கியமானது என்றாலும், அதை காட்சிப்படுத்திய விதம் மிகவும் நெருடலாக இருந்தது. அதுவும் க்ளைமாக்ஸ் முடியும் அந்தக் கடைசி நொடி வரை ஆண்ட்ரியா வசனம் பேசிக் கொண்டே இருப்பதெல்லாம் கொஞ்சம் மிகையாக இருந்தது.
இதுபோன்ற சில குறைகளைப் பொறுத்துக் கொண்டால் மிக அழுத்தமான படம் பார்த்த உணர்வு நிச்சயம் கிடைக்கும். மொத்தத்தில் ஒரு சீரியஸான விஷயத்தை ஓரளவு சுவாரஸ்யத்துடன் கொடுத்திருக்கிறது ‘அனல் மேலே பனித்துளி’. படத்தில் டிஸ்டர்பிங்கான காட்சிகள் பல உண்டு, அவற்றை மனதில் வைத்துக் கொண்டு பார்க்கவும். படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
- ஜான்சன்