நெல்லூர் அரசு இசைப்பள்ளிக்கு மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் பெயரைச் சூட்டி கெளரவிக்க ஆந்திர முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பாடகரான எஸ்.பி.பி கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்காக இந்திய திரையுலகமே பிரார்த்தனை செய்தபோதும் சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார். தமிழில், சாந்தி நிலையம் படத்தில் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடலைத்தான் முதன்முதலாக எஸ்.பி.பி பாடினார். ஆனால், முந்திக்கொண்டு வெளிவந்ததோ எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் வரும் ’ஆயிரம் நிலவே வா’ பாடல்தான்.
இதுவரை 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துள்ளார். பாடகர் மட்டுமல்ல, குணச்சித்திர நடிகர், தயாரிப்பாளர் போன்ற பன்முகத்திறமைக் கொண்டவர்.
(கெளதம் ரெட்டி)
இந்நிலையில் எஸ்.பி.பியை கெளவுரவிக்கும் விதமாக, நெல்லூரில் உள்ள அரசு இசைப்பள்ளியை "எஸ்.பி பாலசுப்ரமணியம் அரசு இசை மற்றும் நடனப்பள்ளி" என பெயர் மாற்ற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ள ஆந்திர தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் கெளதம் ரெட்டிக்கு எஸ்.பி.பியின் மகன் சரண் நன்றி தெரிவித்துள்ளார்.