சாய் ராஜேஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில், ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா, விராஜ் அஸ்வின் நடிப்பில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான தெலுங்கு திரைப்படம் ‘பேபி’. இப்படம் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவ காதல் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், இப்படம் வெளியான 10 நாட்களில் 66.2 கோடி ரூபாயும், 12 நாட்களில் 71.6 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.
தற்போதும் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆனந்த் தேவரகொண்டா, பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சகோதரர்.
காதலை மையமாக வைத்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் வாழ்நாள் வசூலை, வெறும் 11 நாட்களில் அவரது தம்பியான ஆனந்த் தேவரகொண்டாவின் ‘பேபி’ படம் (ரூ.70 கோடி) வசூலித்து சாதனை செய்துள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் ‘டாக்ஸி வாலா’ படத்தையும், ‘பேபி’ படத்தை தயாரித்த ஸ்ரீனிவாசா குமார் தான் தனது மாஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். இரண்டு படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்ததால், தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா குமார் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இயக்குநர் சாய் ராஜேஷ் தயாரிப்பில் உருவான ‘Colour Photo’ திரைப்படம் கடந்த ஆண்டு தேசிய விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.