ஒரே ஒரு சினிமா அப்படியொன்றும் சமூகத்தில் சலனத்தை ஏற்படுத்திவிடாது என்பது எவ்வளவு அபத்தமான வாதம். மகத்தான மாற்றங்களை உலக அளவில், ஏன் தமிழ் சமூக சூழலிலும் கூட சினிமா ஏற்படுத்தி காட்டியபின்பும், ‘சினிமாவை சினிமாவாக பார்த்துவிட்டு மக்கள் கடந்து போய்விடுவார்கள்’ என்று சிலர் வாதங்களை முன் வைப்பது வேடிக்கையாக இருக்கிறது.
எந்தவொரு கலைக்கும் நல்லதும் கெட்டதுமாக பல விதமான தாக்கங்கள் இருக்கவே செய்கிறது. பருத்திவீரன் படம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறித்து பார்ப்பதற்கு முன்பு ‘ஒரு சமூகத்தில் கலைப்படைப்பின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும்?’ என்ற சிறிய எடுத்துக்காட்டை பார்த்துவிடலாம்.
மகத்தான எழுத்தாளர் கேதே 1774 ஆம் ஆண்டு எழுதிய ‘காதலின் துயரம்’ (Sorrows of Young Werther) கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட நாவல். பலரும் போற்றி புகழ்ந்த இந்த நாவலுக்கு பின்னால் ஒரு சோக நிகழ்வு உண்டு.
இப்படியெல்லாம் நடந்ததா என்று அதிர்ச்சியாகும் அளவிற்கான ஒரு செய்தி அது. வெர்தர் எனும் இளைஞனை பற்றிய தோல்வியில் முடிந்த காதல் கதைதான் இந்த நாவல். அதாவது, இந்த நாவலின் முடிவில் வெர்தல் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுத்து இருப்பான் நாயகன்.
துரதிருஷ்டவசமாக, இந்த நாவலை படித்த இளம் வாசகர்கள் பலர் வெர்தரைப் போலவே தற்கொலை முடிவை எடுத்தார்கள். அதுவும் எப்படி என்றால் வெர்தர் போலவே ஆடை அணிந்து தங்களை தாங்களே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்கள். “Werther fever” என்று அதனை அழைத்தார்கள். அதனால், இத்தாலி டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த நாவலை தடை செய்தார்கள்.
அதாவது, ஒரு கலைப்படைப்பு என்பது (அது எதுவாக இருந்தாலும்) மனிதர்களின் மனங்களில் ஊடாடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி படைத்தது. இந்த இடத்தில் நிச்சயம் கே.தே தன்னுடைய நாவலால் இப்படியொரு சம்பவங்கள் நடக்க வேண்டும் என்று நினைத்து எழுதியிருக்க மாட்டார். ஆனால், ஒரு கலை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பின்னால் புரிந்து கொண்டிருப்பார்கள். இந்த பாடம் ஒரு படைப்பால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் உணர்ந்து, இன்னும் கூடுதல் கவனத்துடன் படைக்க வேண்டும் என்பதை உணர்த்தியது.
இந்த உதாரணத்தை பருத்திவீரன் படத்திற்கான உரையாடலில் எடுத்ததற்கு முக்கியமான காரணம் உண்டு. அதனை முடிவில் பார்க்கலாம். பருத்திவீரன் படம் என்பது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய பெஞ்ச் மார்க். ஒரு சினிமா எப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு எப்படி பலரும் தேவர் மகனை உதாரணமாக சொல்வார்களோ அப்படியான எடுத்துக்காட்டான படம்தான் இயக்குநர் அமீரின் ஆகச்சிறந்த படைப்பான பருத்திவீரன். இந்தப்படம் வெளியாகி இன்றோடு 17 வருடங்கள் ஆகிவிட்டன.
ஆனால், இன்றளவும் பருத்திவீரன் தொடர்பாக “இந்தப் படம் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது?” என்ற அர்த்தத்தில் ஒரு உரையாடல் ஒரு விமர்சனம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ‘இந்தப் படம் சாதிய எண்ணங்களை வளர்ப்பதற்கு ஒருவகையில் காரணமாக அமைந்ததா?’ என்பதுதான் நேரடியாக சிலர் வைக்கும் கேள்வி. ‘இல்லை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வாழ்வியலைதான் சொல்லி இருக்கிறதே, தவிர இது சாதியை எண்ணங்களை வளர்க்கும் படம் இல்லை’ என்றும் அந்த கேள்விக்கு சிலர் பதில் அளிக்கிறார்கள். அதனால் இந்தப் படம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை சமூக உளவியல் ரீதியாக கொஞ்சம் அணுகி பார்க்கலாம்.
முத்தழகு, பருத்திவீரன் மரணத்திற்காக பலரும் உருகி அழுதிருக்கலாம். குறிப்பாக முத்தழகின் மரணம் நேர்ந்த விதம் பலரையும் உலுக்கி இருக்கும். முத்தழகின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்ற கோணத்தில் இருந்து கொஞ்ச தூரம் உள்ளே சென்று ஆழமாக பார்க்கலாம். பருத்திவீரன் வாழ்ந்த சீரழிவான வாழ்வின் ஒட்டுமொத்த கெடுதலும் மொத்தமாக சேர்ந்து முத்தழகை கொன்றுவிட்டது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொல்வார்களே.. அப்படியாகத்தான் அவன் செய்த அத்தனை தீய செயல்களின் விளைவும், அவனையே உயிராக நினைத்து அவனுடனேயே வாழ எத்தனித்து புறப்பட்டு வந்த ஒரு தேவதையின் உயிரை பறித்துவிட்டது. பருத்திவீரன் வாழ்ந்த வாழ்க்கைதான் இந்த இடத்தில் கேள்விக்கு உள்ளாகிறது. பருத்திவீரன் வாழ்க்கை ஏன் இப்படியான அவல நிலைக்கு சென்றது. பள்ளிக்கூடம், வேலை என எந்த பொறுப்பும் இல்லாமல் அவன் இப்படி வாழ எது காரணம்?. அவன் ஊரால், சொந்தத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவன். அதாவது பருத்திவீரனின் தாயின் சாதியை மனதில் வைத்து எல்லோரும் ஒதுக்குவார்கள்.
“உன் பொறப்ப மனசுல வச்சிட்டு வாத்தியார் உன்ன அடிச்சிட்டே இருக்காணுதான் நீ படிக்கவே வேணாம்னு தூக்கிட்டு வந்தேன்; இந்த கழுவன், உன்ன வீட்டுக்குள்ள வச்சிருந்தா ஊருக்குள்ள மதிக்க மாட்டாங்கனு எங்களையும் சேர்த்துல வீட்ட விட்டு வெரட்டுனா” என்று அவனது சித்தப்பா செவ்வாழை பேசும் இந்த வார்த்தையில் இருந்து அதனை புரிந்து கொள்ளலாம்.
பாடம் நடத்த வேண்டிய வாத்தியாரும் சாதியை மனதில் வைத்து நடந்து கொண்டிருக்கிறார்.
கழுவனது கஷ்ட காலத்தில் உதவிகளை செய்தவர் அவரது மனைவியின் சகோதரர் மருது (பருத்திவீரனின் தந்தை). ஆனால் அதையெல்லாம் மறந்து சாதியை மனதில் வைத்து பருத்திவீரனையும், செவ்வாழையையும் வீட்டை விட்டு விரட்டி இருக்கிறார் கழுவன். தன்னுடைய மகள் முத்தழகு பருத்திவீரனை கல்யாணம் செய்வதை தடுப்பதும் அதே எண்ணத்தில்தான்.
ஆக மொத்தம் பருத்திவீரனின் சீரழிவான வாழ்க்கைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சாதியாக இருக்கிறது. பருத்திவீரன் வாழ்க்கை சீரழிந்ததற்கும், அதனால் முத்தழகு மரணிப்பதற்கும் அதுவே காரணமாக ஆகிவிட்டது. இதனை அழுத்தமாக பதிவு செய்கிறது பருத்திவீரன் திரைப்படம். பருத்திவீரன் திரைப்படம் சாதிய கட்டமைப்புக்கு எதிரான படம் என்பதில் சந்தேகமே இல்லை.
“சாதி சாதினு ஏற்கனவே ரெண்டு உசுர காவு வாங்குனது பத்தாதா? இவளையுமா பறிகொடுக்கணும்”,
“சாதி ஒன்னும் எனக்கு பெரிசா தெரியல ஆத்தா..”
“போதும்டா போதும் உன் சாதி வெறிய விட்டுட்டு இனியாவது மனுச மாதிரி நடந்துக்க”,
“இந்த சொந்தம், சாதி இதெல்லாம் உன்னோட வச்சுக்க, திங்கிற சோத்துக்கு விஸ்வாசமா இருக்கணும்.. எனக்கு தெரிஞ்சது அவ்ளோதான்”
“சாதி, சாதி, சாதினு.. தின்ன சோத்துக்கு ஒருநாள் கூட உன்னால விஸ்வாசமா இருக்க முடியாதுல”
“உன் பொறப்ப மனசுல வச்சிட்டு வாத்தியார் உன்ன அடிச்சிட்டே இருக்காணுதான் நீ படிக்கவே வேணாம்னு தூக்கிட்டு வந்தேன். இந்த கழுவன், உன்ன வீட்டுக்குள்ள வச்சிருந்தா ஊருக்குள்ள மதிக்க மாட்டாங்கனு எங்களையும் சேர்த்துல வீட்ட விட்டு வெரட்டுனா”..
அத்துடன் படத்தின் டைட்டிலில்,
“மனிதர்களே!
நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் படைத்தோம்.
பிறகு நீங்கள் ஒருவருகொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு
உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்”
என்று இயக்குநர் அமீர் வைத்துள்ள வாசகம் நாம் எல்லாம் ஓர் ஆணிலிருந்தும், பெண்ணில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறது.
மக்களின் வாழ்க்கைய அப்படியே படம் பிடித்து காட்டும் ரியலிஸ்டிக் வகையான திரைப்படம்தான் பருத்திவீரன். ஆனால், அதன் பிரமாண்ட மேக்கிங்கால் அது யதார்தத்தை தாண்டி சென்றுவிட்டது.
பருத்திவீரனின் வாழ்க்கை என்பது வெறுக்க வேண்டிய ஒன்றாக அல்லாமல் மண் வாசனை என்ற பெயரில் முழுமுழுக்க ரொமாண்டிசைஸ் செய்யப்பட்டு விட்டது.
“வீர பரம்பரை” என்ற மிதப்பிலேயே பருத்திவீரனும், செவ்வாழையும் இருக்கிறார்கள். தான் யார், சமூகத்தில் எப்படி நடத்தப்படுகிறோம், தன் தந்தைக்கும் தாய்க்கும் நடந்தது என்ன என்ற எந்த சுய விமர்சனத்திற்குள்ளும் பருத்திவீரன் செல்லவில்லை.
பருத்திவீரன்தான் அப்படி இருக்கிறான் என்றால் முத்தழகு அதற்கு மேல் இருக்கிறாள். படிப்பை விட பருத்திவீரனை திருமணம் முடிப்பதையே குறிக்கோளாய் வைத்திருக்கிறார் முத்தழகு. அவளும் தன்னை காப்பாற்றிவிட்டான் என்ற காரணத்திற்காகவே காதலில் விழுகிறார். அதில் தவறில்லை, ஆனால் பருத்திவீரன் வாழ்க்கை குறித்து வேறு எந்த பிரக்ஞையும் அவளுக்கும் இல்லை. பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்கிறான் என்று தெரிந்த பிறகும் எதற்கு விரட்டி விரட்டி காதலிக்கணும்.? அவனது வாழ்க்கை குறித்து அவளும் பெருமிதமே கொள்கிறாள். ஒரு காட்சியில் முத்தழகின் தோழி “ஏண்டி உன் ஆளு உள்ளேதா இருக்கானா.. இல்ல வெளியே வந்துட்டானா” என்று கேட்கும் பொழுது ‘அவருக்கு என்ன ராசா மாதிரி.. இன்னிக்கு தான் கோர்ட்டுக்கு வந்திருப்பார்’ என்று அவ்வளவு பெருமையோடும், மரியாதையோடும் சொல்வாள்.
தேவர் மகன், பருத்திவீரன், மதயானை கூட்டம்... இந்த மூன்று படங்களுமே குறிப்பிட்ட சமூகத்தின் பின்புலத்தை மையமாக கொண்டு அதில் இருக்கும் தவறான விஷயங்களை சுட்டிக்காட்டுபவைதான்.
தேவர் மகன் படத்தில் சக்திவேல் கொலைகாரனாக ஆக்கப்படுகிறான், பருத்திவீரன் படத்தில் பருத்திவீரன் கொலை செய்யப்படுகிறான், மதயானை கூட்டத்தில் பார்த்திபன் கொல்லப்படுகிறான்.
மதயானைக்கூட்டம் படத்தில் அவ்வளவு நேர்த்தியாக அதனை காட்சிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் ‘உன் உடம்பிலும் அதே ரத்தம்தானே ஓடுகிறது’ என்று வசனம் வைத்த உடனேயே ஒட்டுமொத்தமும் அடிபட்டு போகிறது. படித்தவனான சக்திவேல் தன்னுடைய தோற்றத்தை ஏன் பெரிய தேவர் போல் மாற்ற வேண்டும்? தேவர் மகன் என்ற தலைப்பை ஏன் தேர்வு செய்யணும்..? ஏனெனில் படம் வைக்கும் விமர்சனங்களை தாண்டி அதில் இருக்கும் தன்னுடைய சாதி ரீதியான விஷயங்களை மட்டும் நெருக்கமாக உணர முடிகிறது என்றால் படைப்பில் இருக்கும் இதுபோன்ற சிக்கல்களும் காரணமாக இருக்கலாம்.
பாரதிராஜா படங்களை விடவும் மிக இயல்பாக சாதியப் பெயர்களை உட்பிரிவுகளை கையாள்கிறார் இயக்குநர். இவையெல்லாம் என்ன மாதிரி மற்றவர்களை நினைக்கவைக்கும். கழுவன் கதாபாத்திரத்தை வெறுக்க வைக்க வைப்பதன் மூலமாக சாதிய கண்ணோட்டங்களை வெறுக்க வைக்க வேண்டும். அதனை அமீர் செய்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அழுத்தமாக செய்யாமல் யதார்த்த பாணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது விமர்சனங்களை புறந்தள்ளுவதற்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது.
மீண்டும் காதலின் துயரத்திற்கு வருவோம். வெர்தர் கதாபாத்திரம் எப்படி இளைஞர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதேபோல், பருத்திவீரன் கதாபாத்திரமும் சமூகத்தில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இயக்குநர் அமீர் தான் இந்த நோக்கத்திற்காகத்தான் படம் எடுத்தேன் என்று சமீபத்திய பேட்டிகளிகளில் தெளிவுபடுத்தி இருப்பார். ஆனால், அப்படியான புரிதல்கள் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
ஒரு திரைப்படம் எல்லோரையும் ஒரே மாதிரியாக பாதிக்கும் என்று அர்த்தமில்லை. அதற்கே உரித்தான மனிதர்களை எந்த வகையில் பாதிக்கிறது என்பதுதான் முக்கியமானது. இதனை அடுத்து வரும் இயக்குநர்களும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதால்தான் பருத்திவீரன் போல் அத்தனை படங்கள் தமிழ் சினிமாவில் வரிசையாக எடுக்கப்பட்டது.