மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 29 | “அப்ப என் காதல் ஃபெயிலியரா?” - அவ்வை சண்முகி மணிவண்ணன்!

29-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் அவ்வை சண்முகி திரைப்படத்தில் மணிவண்ணன் ஏற்று நடித்திருந்த சம்பந்த முதலியார் கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
மணிவண்ணன்
மணிவண்ணன்அவ்வை சண்முகி திரைப்படம்
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

2K கிட்ஸ்கள், வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமே மணிவண்ணனை அறிந்திருக்கக்கூடும். ஆனால் கதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதையாசிரியர், இயக்குநர் என்கிற பல்வேறு முகங்கள் அவருக்கு உண்டு. அரசியல் தொடர்பாகவும் அவருக்கு தீவிரமான கருத்துக்கள் உண்டு. சினிமாவைத் தாண்டி நடைமுறை வாழ்க்கையிலும் அவற்றை வெளிப்படையாக உரையாடுபவர்.

ஒருபக்கம் சீரியஸான முகத்தைக் கொண்டிருந்தாலும் நகைச்சுவை நடிப்பு என்று வரும் போது மணிவண்ணன் வேறொரு நபராக மாறி விடுவார். நகைச்சுவைதான் என்றாலும் அதிலும் தனது அரசியல் கருத்துக்களை, சமூக விமர்சனங்களை நையாண்டியாகவும் தீவிரமான தொனியிலும் நைசாக நுழைத்து விடுவார்.

நடிகர், இயக்குநர் மணிவண்ணன்
நடிகர், இயக்குநர் மணிவண்ணன்

மணிவண்ணன் - சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் தந்த இயக்குநர்!

சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த மணிவண்ணன், பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தைப் பார்த்து விட்டு நூறு பக்கத்திற்கும் மேலாக நீளும் கடிதம் ஒன்றை எழுதி இயக்குநருக்கு அனுப்பினார். அதைப் பார்த்து வியந்த பாரதிராஜா, மணிவண்ணனை தனது உதவி இயக்குநராக இணைத்துக் கொண்டார். 1979-ல் பாரதிராஜாவிடம் இணைந்த மணிவண்ணன், இரண்டே வருடங்களில் கதாசிரியராக உயர்ந்து விட்டது. அவருக்கிருந்த திறமையைக் காட்டுகிறது. 1981-ல் வெளிவந்த ‘நிழல்கள்’ திரைப்படம் மணிவண்ணனின் கதையில் உருவானது.

நிழல்கள் திரைப்படம்
நிழல்கள் திரைப்படம்

வணிக ரீதியாக தோல்விப்படமாக அமைந்தாலும் வேலையில்லாத திண்டாட்டம் உள்ளிட்ட அப்போதைய சமூகப் பிரச்சினைகளை இந்தத் திரைப்படம் நுட்பமான முறையில் உரையாடியது.

பிறகு இயக்குநரான மணிவண்ணன் பல வெற்றித் திரைப்படங்களைத் தந்திருந்தாலும் நடிகரான பின்னர் கூடுதல் புகழை அடைந்தார். கொங்குத்தமிழின் வட்டார வழக்கில் அவர் பேசிய நையாண்டியான வசனங்களும் வேகமான உச்சரிப்பும் அதற்குள் இருந்த ஆழமான அரசியலும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

முதலியார் கேரக்டரில் ரொமான்ஸ்

எத்தனையோ திரைப்படங்களில் மணிவண்ணன் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தாலும் ‘அவ்வை சண்முகி’ படத்தில் அவர் ஏற்றிருந்த ‘முதலியார்’ பாத்திரம் மறக்க முடியாதது.

பெரியார் சீர்திருத்தத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் ஒருவர் சார்ந்திருக்கும் சமூகத்தினை அடையாளமாக வைத்து அழைத்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. சாதியக் காழ்ப்பில்லாத உபத்திரவமல்லாத இயல்பு அதில் இருக்கும். இந்த விஷயத்தை தனது பல திரைப்படங்களில் கமல் பயன்படுத்தியிருப்பார். ‘ஐயரே.. நாயக்கரே… செட்டியார்’ போன்ற விளிகள் இயல்பான தொனியில் புழக்கத்தில் வரும்.

‘அவ்வை சண்முகி’ திரைப்படத்திலும் அவ்வாறே. நாடகக் கலையின் முன்னோடிகளில் ஒருவரும் தனது குருநாதருமான தி.க. சண்முகத்தின் பெயரை படத்தின் தலைப்பில் வைத்த கமல், தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படும் ‘பம்மல் சம்பந்த முதலியார்’ பெயரை மணிவண்ணன் பாத்திரத்தில் வைத்திருந்தார்.

மணிவண்ணன் (அவ்வை சண்முகி திரைப்படம்)
மணிவண்ணன் (அவ்வை சண்முகி திரைப்படம்)

இந்தத் திரைப்படத்தில் மணிவண்ணனின் பாத்திரம் சுவாரசியமானது. அவரது வழக்கமான அரசியல் வாசனை எதுவும் கிடையாது. அதற்கு மாறாக ‘பிராமணப் பெண்மணி’ வேடத்தில் இருக்கும் கமல்ஹாசனை உண்மை தெரியாமல் காதல் ஏக்கத்தில் பார்ப்பதும் அதற்காக ஏங்குவதும் உருகுவதும் என்கிற ரகளையான பாத்திர வடிவமைப்பில் நடித்திருந்தார். அவருடைய பிரத்யேகமான அடையாளமான தாடியுடன் வேட்டி, முக்கால் கை சட்டை, நெற்றியில் குங்குமம் என்று வட்டி வசூல் தொழில் செய்பவராக படம் பூராவும் நகைச்சுவை கலாட்டாவை நிகழ்த்தியிருந்தார்.

மணிவண்ணன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 21 | குருமார்களின் ரகசிய வன்மத்தின் விதை, ஆடுகளம் பேட்டைக்காரன்

‘ஓட்டை வாய்டா முதலி உனக்கு’...

முதலியார் மற்றும் சண்முகியின் பெரும்பாலான சந்திப்புகள், படிக்கட்டின் நெருக்கடியான இடத்தில் முட்டிக் கொள்வதோடு ஏற்படும். முதன்முறை சண்முகியின் மீது மோதி விடும் முதலியார், பயபக்தியுடன் ‘மன்னிச்சுடுங்கோ மாமி’ என்று பம்முவார். இந்த ‘முதலியார்’ பாத்திரத்தின் மூலம் சென்னையின் கொச்சையான மொழியை சிறப்பாக பேசியிருப்பார் மணிவண்ணன். ‘ஒவ்வொரு தபாவும் இடிச்சுக்கறோம்’ என்று அடுத்த முறை மாமியைப் பார்க்கும் போது அசடு வழிவார்.

மணிவண்ணன் - கமல்ஹாசன் (அவ்வை சண்முகி திரைப்படம்)
மணிவண்ணன் - கமல்ஹாசன் (அவ்வை சண்முகி திரைப்படம்)

மாடிப் படிக்கட்டில் விறுவிறுவென்று ஏறும் சண்முகியை பெருமூச்சுடன் நோக்கும் முதலியார், “பாண்டி மேல இல்ல” என்று தகவல் சொல்ல, ‘அதான் தெரியுமே’ என்பார் மாமி. “எப்படி தெரியும்?” என்று முதலியார் கேட்க “அதான் இப்ப சொன்னீங்களே?” என்று சண்முகி சமாளிப்பது வழக்கமான பாணியாகவே மாறி விடும். ‘ஓட்டை வாய்டா முதலி’ என்று தன்னையே நொந்து கொள்ளவார் மணிவண்ணன்.

மணிவண்ணன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 23 | உடலசைவிலேயே அசாத்திய நடிப்பை கொடுத்த ‘முதல்வன்’ பட ரகுவரன்

சண்முகியை சந்திக்கும் போதெல்லாம் ‘கண்ணகி.. வாசுகி..’ என்று வெவ்வேறு பெயர்களில் மறதியாக அவரை அழைத்துக் குழப்புவது முதலியாரின் ஸ்டைல் (இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பயன்படுத்தும் இந்தப் பாணி ‘தெனாலி’ படத்திலும் வரும்). சண்முகியின் மீதுள்ள ஆசையால், அறிமுகப்படுத்தச் சொல்லி பாண்டியனை நச்சரிப்பார் முதலியார்.

“உங்களுக்கு என்னதான் வேணும்?” என்று அவரின் அங்கலாய்ப்பு தாங்காமல் பாண்டி கேட்க “உனக்கு சைவம் சமைக்கச் சொல்ல எனக்கும் சேர்த்து சமைக்கச் சொல்லுப்பா” என்று வேண்டுகோள் வைத்து விட்டு “நாங்க சைவ முதலியார்” என்று சொல்லுமிடத்தில் வசனகர்த்தா கிரேஸி மோகனின் குறும்பு தெரியும்.

நடுத்தர வயதுக் காதல்

பாண்டியனே குளியல் அறைக்குள் இருந்து கொண்டு சண்முகியின் குரலில் “அந்தாளைப் பார்த்தாலே சகிக்கல. உனக்கு வேணா அவர் முதலியாரா இருக்கலாம். எனக்கு முதலி யாரோ?” என்று சிலேடையில் தன் எரிச்சலைக் காட்ட மணிவண்ணனின் முகம் சுருங்கி விடும்.

மணிவண்ணன் - கமல்ஹாசன் (அவ்வை சண்முகி திரைப்படம்)
மணிவண்ணன் - கமல்ஹாசன் (அவ்வை சண்முகி திரைப்படம்)

“விருந்தோம்பலைப் பத்தி வள்ளுவர் என்ன சொல்லியிருக்காருன்னு தெரியுமா?” என்று உரத்த குரலில் கோபத்துடன் கேட்பார். “என்ன சொல்லியிருக்கார்?” என்று பாண்டியன் எரிச்சலுடன் கேட்க “அது தெரியாமத்தானே உன்னைக் கேட்கறேன்” என்று வேட்டியை மடித்துக் கொண்டே முதலியார் நைசாக கிளம்புமிடத்தில் நமக்கு சிரிப்பு வராமல் போகாது.

மணிவண்ணன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 24 | கொலைக்கருவிகளை உற்பத்தி செய்யும் அரசியல்வாதி சமுத்திரக்கனி

அடுத்த முறையான ‘மாடிப்படி’ சந்திப்பில் ‘மாமி.. படி ஏறும் போதும் நல்லாயிருக்கு.. இறங்கும் போது நல்லாயிருக்கு’ என்று தனக்குள் முனகியபடி ரொமான்டிக்கான பெருமூச்சை விடுவார் முதலியார். இவரைத் தவிர இன்னொரு ரொமான்ஸ் இம்சையையும் சண்முகி எதிர்கொள்ள நேரிடும்.

மணிவண்ணன் (அவ்வை சண்முகி திரைப்படம்)
மணிவண்ணன் (அவ்வை சண்முகி திரைப்படம்)

அது அவரது முதலாளியும் மாமனாருமான விஸ்வநாத ஐயர். அவரும் தன் காதல் விருப்பத்தை ஒரு ரோஜாப்பூவின் மூலம் தெரிவிக்க, அந்தப் பூவை எரிச்சலுடன் கீழே தூக்கிப் போடுவார் சண்முகி. அது கீழ் படிக்கட்டில் இருக்கும் முதலியாரின் மேல் விழ, பின்னணியில் குயில் கூவ, அதைக் காதலின் சமிக்ஞையாக முதலியார் எடுத்துக் கொள்ளும் காட்சி ரணகளமான காமெடியாக இருக்கும்.

சண்முகி தூக்கிப் போட்ட பூவை எடுத்துக் கொண்டு ‘அப்ப இது அதானே ஜெஸ்ஸி?’ என்கிற மாதிரி பாண்டியனை கேள்வி கேட்டு இம்சை செய்வார் முதலியார்.

மணிவண்ணன் - கமல்ஹாசன் (அவ்வை சண்முகி திரைப்படம்)
மணிவண்ணன் - கமல்ஹாசன் (அவ்வை சண்முகி திரைப்படம்)

“காக்கா உங்க மேல கக்கா போனா அதுக்கு உங்க மேல காதல்ன்னு அர்த்தமா.., வேண்டாம்ன்னு தூக்கிப் போட்ட பூவா இது இருக்கலாம்” என்று அந்த ரொமான்ஸ் உணர்வை இரக்கமேயில்லாமல் உடைப்பான் பாண்டியன்.

மணிவண்ணன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 25 | காமெடியும் செண்டிமண்ட்டுமாய்... ‘அய்யாக்கண்ணு’ வடிவேலு!

‘நீ கையைத் தொட்டா வீணை வாசிக்கற மாதிரி இருக்குது”

சண்முகியின் பின்னணியை கண்டுபிடிப்பதற்காக டெல்லி கணேஷ் மாமியைப் பின்தொடர, அவருக்கு பல்வேறு விதமாக போக்கு காட்டி விட்டு முதலியார் இருக்கும் மார்க்கெட் பகுதிக்குள் நுழைவார் மாமி. “வீட்டுக்குப் போறீங்களா.. மாமி.. வாங்க சைக்கிள் ரிக்ஷால போலாம். உங்களுக்கு கூச்சமா இருந்தா நீங்க வண்டில ஏறிக்கங்கோ.. நான் கூடவே ஓடி வரேன்” என்று பதின்ம வயது இளைஞனின் காதலுணர்ச்சியுடன் முதலியார் சொல்வது ரசிக்கத்தக்க காட்சி.

மணிவண்ணன் - கமல்ஹாசன் (அவ்வை சண்முகி திரைப்படம்)
மணிவண்ணன் - கமல்ஹாசன் (அவ்வை சண்முகி திரைப்படம்)

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தப்பிக்க நினைக்கும் சண்முகி “தோ.. போய் பூ வாங்கிட்டு வந்துர்ரேன்’ என்று ரொமான்ஸூடன் கிளம்பும் முதலியாரின் கையை தற்செயலாகப் பிடிக்க, பின்னணியில் வீணை சத்தம் கேட்க “நீ தொட்டவுடனே எனக்கு வீணை சத்தமா கேட்குது. வாசிச்சியா?” என்று முகத்தில் காதல் பரவசம் பொங்க மணிவண்ணன் கேட்கும் காட்சி சுவாரசியமானது.

“என்னை ஒருத்தன் ஃபாலோ பண்ணிட்டு வரான். நீங்க ரோஜாப்பூன்னா.. அவன் மல்லிகைப்பூ.. நீங்களாவது ரோசாப்பூவை பெருங்காய டப்பால வெச்சிருக்கீங்க. அவன் காதுலயே வெச்சிக்கிட்டு சுத்தறான்” என்று தான் தப்பிப்பதற்காக பின்தொடரும் ஆசாமியை தந்திரமாக கோர்த்து விட்டு விடுவார் சண்முகி. “நீங்க போங்கோ மாமி. நான் அவனைப் பார்த்துக்கறேன்” என்று சொல்லும் முதலியார் “ஏரியா. விட்டு ஏரியா வந்து சைட் அடிக்கறாண்டா. போடுங்க” என்று டெல்லி கணேஷிற்கு தர்மஅடி போடுவார்.

மணிவண்ணன் - டெல்லி கனேஷ் (அவ்வை சண்முகி திரைப்படம்)
மணிவண்ணன் - டெல்லி கனேஷ் (அவ்வை சண்முகி திரைப்படம்)

மயக்கமாக விழுந்திருக்கும் அவருடைய முகத்தில் சோடா தெளித்து விட்டு “டேய் தெளிஞ்சுடுச்சுடா.. அடிங்க” என்று முதலியார் சொல்வதும் “ஏண்டா.. தெளிய வச்சு.தெளிய வச்சு அடிக்கறீங்க?” என்று சேதுராமய்யர் பரிதாபமாக கேட்பதும் “மயக்கத்துல இருக்கும் போது அடிச்சா வலி தெரியுமா.. அதான்” என்று முதலியார் லாஜிக் பேசுவதும் ரகளையான காட்சிக்கோர்வை.

மணிவண்ணன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 26 | நாயகன் பட ‘ஜனகராஜ்’!

வில்லங்கமான காதல் - கண்ணியமான நகைச்சுவை

ஒப்பனையை மாற்றிக் கொண்டு பாண்டியனாக திரும்பும் கமல், தர்ம அடி வாங்கிக் கொண்டிருக்கும் டெல்லி கணேஷைக் காப்பாற்றுவார். “யாருப்பா.. அந்தாளு?” என்று முதலியார் கேட்க “இவர்தான் சண்முகியோட புருஷன்” என்று பாண்டியன் இஷ்டத்திற்கு அடித்து விட “திரும்பி வந்துட்டானா.. அப்ப என் காதல் ஃபெயிலியரா?” என்று முதலியார் கண்கலங்கி உருகுமிடத்தில் சிரிப்பதா, பரிதாபப்படுவதா என்கிற சிக்கலை உருவாக்கி விடுமளவிற்கான நடிப்பைத் தந்திருப்பார் மணிவண்ணன்.

மணிவண்ணன் - கமல்ஹாசன் (அவ்வை சண்முகி திரைப்படம்)
மணிவண்ணன் - கமல்ஹாசன் (அவ்வை சண்முகி திரைப்படம்)

சந்தர்ப்ப சூழல் காரணமாக, பெண் வேடத்தில் இருக்கும் ஓர் ஆணை, இன்னொரு ஆண் காதல் உருக்கத்துடன் துரத்துவது போன்ற பாத்திரத்தை கண்ணியக்குறைவு ஏற்படாத அதே சமயத்தில் நிஜமான உருக்கத்துடன் கையாண்ட ‘முதலியாராக’ மணிவண்ணன் நம் மனதில் எப்போதும் நிலைத்து நிற்பார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com