தமிழ் சினிமாவில் உள்ள மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவர் எம்.எஸ்.பாஸ்கர். தனியார் நிறுவனத்திலும், காப்பீட்டு முகவராகவும் பணிபுரிந்த பாஸ்கருக்கு நடிப்பில் ஆர்வம் என்பதால் பல நாடகக்குழுக்களில் நடித்துக் கொண்டிருந்தார். பின்பு ‘சின்ன பாப்பா, பெரிய பாப்பா’ போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிப்பதின் மூலம் கவனம் பெற்று பிறகு ‘திருமதி ஒரு வெகுமதி’ திரைப்படம் வழியாக சினிமாவில் பிரமோஷன் கிடைத்தது.
அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்றிருந்தாலும் கூட அவற்றில் சில பாத்திரங்களை மறக்கவே முடியாதபடியாக மாற்றினார். அதில் ஒன்று ‘மொழி’ திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த ‘ஞானப்பிரகாசம்’ என்கிற பாத்திரம். ‘சிறந்த துணை நடிகருக்கான’ தமிழ்நாடு அரசு விருது பாஸ்கருக்கு கிடைத்தது.
“மார்க் மை வேர்ட்ஸ்.. ரஹ்மான்னு ஒரு புதுப்பையன் வந்திருக்கான்.. நல்லா மியூசிக் பண்றான்.. சிறப்பா வருவான்” என்று இப்போது யாராவது பெருமிதமாகச் சொன்னால் உடனே சிரித்து விடுவோம் அல்லவா? நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவர் பழைய தகவலை புதிது போல் சொன்னாலும் இந்த வசனத்தை வைத்து அவரைக் கிண்டலடிப்போம்.
காலத்தால் நினைவுகள் உறைந்த போன ஒரு தகப்பனின் பாத்திரத்தில் உணர்ச்சிகரமாக நடித்து, அந்த கேரக்டரை மறக்க முடியாததாக ஆக்கினார் பாஸ்கர்.
இயக்குநர் ராதாமோகனின் திரைப்படங்களில் உணர்ச்சிகரமான திரைக்கதைக்கு நடுவே இயல்பான நகைச்சுவை பிரிக்க முடியாத அளவிற்கு கலந்திருக்கும். இது குணச்சித்திர நடிகர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. காமெடி பாத்திரங்களில் எம்.எஸ்.பாஸ்கர் கலக்கி விடுவார் என்பது தெரியும். ஆனால் ‘மொழி’ திரைப்படத்தின் பாத்திரம் சற்று வித்தியாசமானது. அது பேசுவதெல்லாம் மிகையாகவும் இடையூறாகவும் தெரியும். அந்த நடிப்பு சீரியஸான தொனியில் காமெடி செய்வதாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் அந்த காரெக்டர் மீது அனுதாபமும் பார்வையாளனுக்கு தோன்ற வேண்டும்.
இப்படியொரு சிக்கலான வடிவமைப்புடன் அந்தப் பாத்திரத்தை எழுதியிருந்தார் ராதாமோகன். இதை தன்னுடைய நடிப்பால் அற்புதமாக வெளிக்கொணர்ந்திருந்தார் பாஸ்கர். 1984-ம் ஆண்டின் நினைவிலேயே இந்தப் பாத்திரம் உறைந்து விடுவதும், அது தொடர்பான தகவல்களையே புதிது போல் பேசிக் கொண்டிருப்பதும்தான் இதன் கேரக்டர் ஸ்கெட்ச். இதற்காக அந்த வருடத்தில் நடந்த முக்கியமான சம்பவங்களை வசனத்தில் கச்சிதமாகப் பொருத்தியிருப்பார் இயக்குநர்.
நாயகி அர்ச்சனாவைக் கண்டவுடன் காதல் கொள்வான் நாயகன் கார்த்திக். அவளிடம் அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக துடிப்பான். நெருங்கிப் போய் பெயரை விசாரிப்பான். அப்போது பிரேமில் அசட்டுத்தனமான கம்பீரத்துடன் ஒரு உருவம் நுழையும்.
“என் பெயர் ஞானப்பிரகாசம்.. புரொபசர் ஞானப்பிரகாசம்.. நீங்க என்ன வேலை பார்க்கறீங்க.. ஓ.. சினிமா மியூசிக்கா.. எனக்கு கூட பாட்டு கேக்கறது பிடிக்கும். சமீபத்தில் வந்த ஒரு பாட்டு அத்தனை அற்புதம். ‘ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’.. I think it’s Bhimpalasi raag. அப்புறம் மணிரத்னம்ன்னு ஒரு பையன் வந்திருக்கான். பிரில்லியண்ட் guy. He’ll go places.. Mark my words” என்று சமகாலத்திற்கு சம்பந்தமேயில்லாமல் பேசும் அந்த விநோதமான ஆசாமியை உள்ளூற சிரிப்புடன் பார்ப்பான் கார்த்திக்.
வழுக்கைத் தலை, அலுவலக குமாஸ்தா போன்ற ஆடை, ஹவாய் செருப்பு என்று இயல்பான தோற்றத்தில் இருந்தாலும் பேச்சு மட்டும் வித்தியாசமாக இருக்கும். அப்போது ஸ்கூட்டரில் கடந்து செல்லும் ஒருவரை தடுத்தும் நிறுத்தும் ஞானப்பிரகாசம், “ஏன் சார் ஹெல்மேட் போடாம போறீங்க.. போலீஸ் பிடிப்பாங்கள்ல.. லாஸ்ட் வீக் எம்.ஜி.ஆர் கூட ஒரு இண்டர்வியூல சொல்லியிருக்காரு” என்று கேட்க, அவரோ எதையோ சொல்லி சமாளித்தபடி கிளம்பி விடுவார்.
இந்த ‘ஹெல்மேட்’ விஷயம் வசனத்தில் ஏன் வருகிறதென்று பிறகுதான் தெரியும். அது மட்டுமல்ல, ஞானப்பிரகாசம் ஏன் இப்படி விநோதமாக பேசுகிறார் என்பதும். இன்னொன்றும் தெரிகிறது. ‘ஹெல்மேட் போடுவது’ குறித்தான சட்டம் நெடுங்காலமாகவே வருவதும் போவதுமாகவே இருந்திருக்கிறது.
விசித்திர ஆசாமி பற்றி செக்யூரிட்டியிடம் விசாரிக்கிறான் கார்த்திக். “பெரிய படிப்பு படிச்சவர் சார்.. மண்டையைப் பார்த்தாலே தெரியல.. புரொபசரா இருந்தவர். ஒரு விஷயத்துல ரொம்ப அப்செட் ஆயிட்டார். இன்னமும் உலகம் 1984-லயே இருக்கறதா நெனச்சிட்டு இருக்கார்” என்று சொல்கிற செக்யூரிட்டி, யாரோ அவசரமாக அழைக்கவே சென்று விடுவதால் பாதி தகவல் மட்டுமே கிடைக்கிறது. (இதுவெல்லாம் திரைக்கதை எழுதுவதில் உள்ள நுணுக்கங்கள்!)
பள்ளிக்கு தாமதமாக கிளம்பிக் கொண்டிருக்கும் ஒரு பெண் குழந்தையிடம் “இப்படி லேட்டா போனா you will miss your lessons. உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்னு பட்டுக்கோட்டை பாடியிருக்காரு.. ஒழுக்கம் முக்கியம்” என்று உபதேசம் செய்து கொண்டிருக்கும் ஞானப்பிரகாசத்தை தூரத்தில் நின்று வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறான் கார்த்திக்.
அபார்ட்மெண்ட்டில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்க, அங்கு வரும் ஞானப்பிரகாசம், ‘குட் ஷாட்.. போன வாரம் மேட்ச் பார்த்தியா.. பாபு.. அதாம்ப்பா.. ஆஸ்திரேலியா கிட்ட இந்தியா 46 ரன்ல தோத்துச்சே.. வேர்ல்ட் கப் வின் பண்ணி ஒரு வருஷம் கூட ஆகலை. அதுக்குள்ள இப்படி தோக்கக்கூடாது. டீம்ல யெங்க்ஸ்டர்ஸ் நிறைய பேர் வரணும். கவாஸ்கர் should retire. ஹைதராபாத் டீம்ல ஒரு பையன் ஆடறான். பிரில்லியண்ட். இந்தியன் டீம் கேப்டனா கூட வருவான்.. அவன் பேரு.. (மறந்து போகிறது).. ஆங்.. அசாருதீன். மொஹம்மத் அசாருதீன்..நல்ல ஃபீல்டரும் கூட. பிரமாதமா ஆடறான்..”
கார்த்திக் தனது வீட்டில் உறங்க ஆயத்தமாகும் போது வெளியே சத்தம் கேட்கிறது. வந்து பார்த்தால் அபார்ட்மெண்ட் செக்ரட்டரியிடம் ஞானப்பிரகாசம் ஆவேசமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். கார்த்திக் விசாரிக்கிறான். “நீயே கேளு பாபு. எம்.ஜி.ஆருக்கு உடம்பு சரியில்லையாம்.. அப்பல்லோ ஹாஸ்பிட்டல சேர்த்திருக்காங்க. பிரெயின் டியூமர்ன்னு சொல்றாங்கப்பா.. ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா.. லா அண்ட் ஆர்டர் பிரச்சினையா ஆயிடும். காலைல பேப்பர் வராது.. பால் வராது.. இந்த செக்ரட்டரி எந்த ஆக்ஷனும் செய்யாம சும்மா இருக்கான்.. Mark my words. Your days are numbered” என்று செக்ரட்டரியிடம் எகிறுகிறார் ஞானப்பிரகாசம்.
அவரை சமாதானப்படுத்தி தனியாக அழைத்து வரும் கார்த்திக், “எம்.ஜி.ஆருக்கு ஒண்ணும் ஆகாது சார்.. அவரை அமொிக்கா அழைச்சிட்டு போயிருக்காங்க.. கூடவே நெடுஞ்செழியன் போயிருக்காரு. பாக்யராஜூம் பின்னாடி போகப் போறாரு.. அடுத்த எலெக்ஷன்ல அவர்தான் ஜெயிப்பாரு. அவரு ஜாதகம் அப்படி சார்.. நீங்க போங்க” என்று கார்த்திக் சொல்ல “பாபு.. நீ எத்தனை பொறுப்பா பதில் சொல்ற.. நீதாம்பா அடுத்த செக்ரட்டரி” என்கிறார் ஞானப்பிரகாசம்.
சத்தம் கேட்டு அழைத்துப் போவதற்காக அவரது மனைவி வர “பால் வந்தாலும் வரலைன்னாலும் நீ போடற காஃபி ஒரே மாதிரிதான் இருக்கப் போகுது” என்று டைமிங்கில் சொல்லி விட்டுச் காட்சியில் பாஸ்கரின் நடிப்பு சிறப்பாக இருக்கும்.
ஞானப்பிரகாசம் அகன்றதும் அவரது மனைவி உருக்கமாகச் சொல்கிறார். “எல்லோரும் அவரை கிண்டலாத்தான் பார்ப்பாங்க.. பேசுவாங்க.. நீங்க மட்டும்தான் அன்பா பேசறீங்க” என்று சொல்ல “அவருக்கு என்ன ஆச்சு?” என்று கார்த்திக் விசாரிக்கிறான். அப்போதுதான் ஞானப்பிரகாசத்தின் உருக்கமான பின்னணி தெரிய வருகிறது.
“எங்க பையன் +2 படிக்கும் போது ஒரு விபத்துல இறந்துட்டான். 1984-ம் வருஷம். இவர் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடலை. அழவேயில்லை. ஆனா அதுக்கப்புறம் உலகத்துல என்ன நடக்குதுன்னே இவருக்குத் தெரியல. அன்னிக்கு மட்டும் இவர் அழுதிருந்தா இப்படி ஆகியிருக்காது. இவரைப் பொறுத்தவரைக்கும் உலகம் அன்னிக்கே நின்னிருச்சு” என்று சொன்னதும் “உங்க பையன் பேரு பாபுவாம்மா”? என்று விசாரிக்கிறான் கார்த்திக் “அப்படித்தான் நாங்க அவனைக் கூப்பிடுவோம். அவன் மட்டும் இருந்திருந்தா உங்களை மாதிரிதான் இருந்திருப்பான்.” என்கிறார் அவர். அப்போதுதான் நமக்கே வாய்க்கு வாய் ‘பாபு’ என்று ஞானப்பிரகாசம் அழைப்பது நினைவிற்கு வருகிறது.
“இன்னிக்கு என் பிறந்த நாள் சார் ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று கார்த்திக் ஆசிர்வாதம் கேட்க, பரிசாக என்ன தருவது என்று தெரியாமல் திகைக்கும் ஞானப்பிரகாசம், சட்டென்று தான் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தையே பரிசாகத் தந்து விடுகிறார். “மார்க் மை வேர்ட்ஸ் பாபு.. நாளைக்கு உலகமே கம்ப்யூட்டரை நம்பித்தான் இருக்கும். சுஜாதா கூட குமுதத்தில் எழுதியிருக்கிறாரே..இதுல எந்த சந்தேகம்னாலும் என்னைக் கேளு” என்கிற ஞானப்பிரகாசம், “உன் நட்சத்திரம் என்ன பாபு.. கோவிலுக்குத்தான் போறேன்.. உன் பெயர்ல ஒரு அர்ச்சனை பண்றேன்” என்று அவர் கிளம்புவதைப் பார்த்து கார்த்திக் நெகிழ்ந்து நிற்கிறான்.
இன்னொரு சமயத்தில் ‘இந்திரா காந்தியை சுட்டுக் கொன்னுட்டாங்களாம் பாபு.. எவ்வளவு பெரிய லீடர். அவங்க பாடிகார்ட்ஸே சுட்டுட்டாங்களாம்.. நிச்சயம் கலவரம் வரும். இந்த செக்ரட்டரிக்கு பொறுப்பே இல்லை. நான் மெயின் கேட்டை பூட்டிட்டு வந்துட்டேன்” என்று ஞானப்பிரகாசம் சொல்ல ‘அய்யோ’ என்று அதிர்ச்சி காட்டுகிறான் கார்த்திக்.
இருவரும் திரும்பி நடக்கும் போது ஞானப்பிரகாசத்தின் செருப்பு அறுந்து விட “பாபு.. எனக்கு செருப்பு வாங்கிக் கொடேன்” என்று இயல்பாக கேட்கும் காட்சியில் பாஸ்கரின் நடிப்பு அத்தனை அற்புதமாக இருக்கும்.
கார்த்திக் ஞானப்பிரகாசத்தின் பிளாட்டிற்குள் நுழைகிறான். புத்தகங்களுக்குப் பின்னால் அவருடைய தலை தெரிகிறது. “வா.. பாபு” என்று அழைக்கிறார். தான் வாங்கி வந்திருக்கும் புதிய செருப்பை அவரிடம் தருகிறான் கார்த்திக். மிக இயல்பாக அதை வாங்கி அணிந்து கொண்டு, சரியாக இருக்கிறதா என்று இரண்டு முறை நடந்து “perfect. Feel like my gloves” என்று சொல்லி விட்டு சாதாரணமாக சென்று விடுகிறார்.
“இப்படி யாரு கிட்டயும் அவரு உரிமையா எதையும் கேட்டதில்லை” என்று ஞானப்பிரகாசத்தின் மனைவி உருக்கமாகச் சொல்ல “எனக்கு சந்தோஷம்மா.. எங்க அப்பாவிற்கு பண்றதா நெனச்சுக்கறேன்” என்று நெகிழ்வாகச் சொல்கிறான் கார்த்திக். மேலே இருந்து பார்க்கும் போது செக்யூரிட்டியிடம் தனது செருப்பைக் காட்டி ‘மகன் வாங்கித் தந்தது’ என்பது போல் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருக்கிறார் ஞானப்பிரகாசம்.
கார்த்திக் பிளாட்டின் காலிங் பெல் அகால நேரத்தில் அடிக்கிறது. வெளியே ஞானப்பிரகாசம் துயரமான முகத்துடன் நின்று கொண்டிருக்கிறார். “என் கூட ஆஸ்பிட்டல் வரைக்கும் வர முடியுமா பாபு.. என் பையன் எப்பவும் ஹெல்மேட் போட்டுடுத்தான் போவான்.. இன்னிக்குப் போடலை.. லாரி மோதிடுச்சாம். என் மனைவிக்கு இன்னமும் விஷயம் தெரியாது.. தாங்க மாட்டா.. பிரில்லியண்ட் பாய்..
ஐஐடி எக்ஸாமிற்கு பிரிப்போ் பண்ணிட்டு இருந்தான்… உடம்புல ஒரு காயமும் இல்லையாம்.. ஹெட் இன்ஜூரின்னு சொல்றாங்க.. என் கூட வர முடியுமா?” என்று ஞானப்பிரகாசம் உருக்கமாகக் கேட்க சட்டென்று முடிவு செய்கிறான் கார்த்திக். நிச்சயம் இவருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்துதான் ஆக வேண்டும். அது தவிர கார்த்திக்கும் தனது தனிப்பட்ட பிரச்சினைகளில் இருக்கிறான்.
எனவே கோபத்துடன் ஞானப்பிரகாசத்தின் சட்டையைப் பிடித்து “உன் பையன் பாபு செத்துட்டான்யா.. ஆக்சிடென்ட்ல செத்துட்டான். எம்.ஜி.ஆர் செத்துட்டாரு.. இந்திரா காந்தி செத்துட்டாங்க.. உன் பையனும் செத்துட்டான்.. அவன் செத்து இருபது வருஷம் ஆயிடுச்சு.
உன் பொண்டாட்டி ஏன் அழறாங்கன்னு தெரியுமா.. தன் புருஷன் இப்படி ஆயிட்டாரேன்னுதான்.. வாயைத் திறந்து அழுய்யா.. அழு.. உன் பையன் செத்துட்டான்.. அழு..” என்று அவரைப் பிடித்து உலுக்குகிறான் கார்த்திக். அதைக் கேட்டு ஞானப்பிரகாசம் வாய் விட்டு ‘கோ’வென்று அழுகிறார்.
மனம் தாங்காமல் அவரைக் கட்டியணைத்துக் கொண்டு தானும் கண்ணீர் சிந்துகிறான் கார்த்திக். தூரத்தில் நிற்கும் ஞானப்பிரகாசத்தின் மனைவிக்கும் கண்ணீர் வந்தாலும் கூடவே ஆறுதலும் தெரிகிறது. தன் கணவர் வாய் விட்டு அழுது விட்டால் இனி சரியாகி விடுவார் என்கிற நம்பிக்கையின் வெளிச்சம் அது.