'உன்னை நான் அறிவேன்..' குணாவின் நிஜ 'அபிராமி' ரேகா நடித்த ரோஸி தான்..!

ரோஸி பாத்திரத்தை தனது இயல்பான நடிப்பால் சுமந்திருந்த ரேகாவை, குணா திரைப்படத்தை நினைவு கொள்ளும் போதேல்லாம் கூடவே நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 28
Reka
RekaGuna
Published on

பாரதிராஜாவால் 'ஜெனிஃபர்' டீச்சராக, கடலோரக் கவிதைகள் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ரேகா. அதே ஆண்டில் (1986) கமல்ஹாசனுடன் நாயகியாக ‘புன்னகை மன்னனில்’ நடித்து 'எதிர்பாராமல்' கிடைத்த முத்தம் காரணமாக திகைத்துப் போனவர். பிறகு பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நாயகியாக நடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல்ஹாசனுடன் ஒரு படம்.


1991-ல் வெளியான 'குணா' திரைப்படத்தில் ரேகா ஏற்றது ஒரு குணச்சித்திர பாத்திரம். பல நடிகைகள் ஏற்கத் தயங்கும் சவாலான பாத்திரமும் கூட. பாலியல் தொழிலாளி கேரக்டரை துணிச்சலுடன் ஏற்று நடித்தார் ரேகா. சில காட்சிகளில் மட்டுமே வந்து போவது என்றாலும் ‘ரோசி’ என்கிற அந்தப் பாத்திரம் மிக முக்கியமானது.

ரோசி - சபிக்கப்பட்டதொரு தேவதை

குணா என்கிற குணசேகரன். மனநலம் பிறழ்ந்தவன் என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவனுடைய உலகின் இயக்கம் தெளிவாக இருக்கிறது. சுற்றியுள்ள அசிங்கங்களிலிருந்து தன்னை கழுவிக் கொண்டு பரிசுத்தமாக மாறுவதற்கு ஒரு தூய்மையான பிம்பத்தின் துணையை அவனுடைய அகம் தேடிக் கொண்டேயிருக்கிறது. அபிராமியின் கடைக்கண் பார்வைதான் தன்னைக் கடைத்தேற்ற முடியும் என்று குணா உள்ளுக்குள் வலிமையாக நம்புகிறான். ‘அபிராமி.. பெளர்ணமி.. கல்யாணம்’.. என்று பிதற்றியபடியே இருக்கிறான்.

Reka
நேர்மை பிடிக்கும்.. ஆனால் சூழ்நிலை கைதி... உளவியல் சதுரங்க ஆட்டத்தில் ‘குருதிப்புனல்’ கே விஸ்வநாத்!

அம்மா செத்துப் போனதற்கு (?!) மாட்டிடமும், குருவி செத்துப் போனதற்கு குயிலிடமும் சொல்லி அழுகிறவன் குணா. மனிதர்களிடம் பேசுவதற்கான வார்த்தைகள் அவனிடம் இல்லை. ‘பித்தன்’ என்று அறியப்பட்டாலும் தீமையைக் கண்டால் பெருங்கோபம் கொள்கிறவன். அந்தச் சமயத்தில் அவனைக் கட்டுப்படுத்த அவனது தாயால் கூட இயலாது. காட்டுயானை மாதிரி குணா கட்டவிழ்த்து தடதடவென நகரும் போது அவனைக் கட்டுப்படுத்த இரண்டு நபர்களால் மட்டுமே முடியும். ஒன்று ‘டாக்டர்’. குணாவின் 17 வயதிலிருந்து அவனுக்கு சிகிச்சையளித்து வருபவர். இன்னொருவர் ‘ரோசி’. குணாவின் தாய் நடத்தும் பாலியல் விடுதியில் உள்ள பெண்களில் ஒருவர். சபிக்கப்பட்ட தேவதை.

கருணையும் காதலுமாக இயங்கும் ரோசி

இந்தத் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியே குணா மற்றும் ரோசியுடன்தான் ஆரம்பிக்கிறது. கட்டிடத்தின விளிம்பில் ஒற்றைக்காலில் தவம் போல் நின்று கொண்டிருக்கும் குணா, சாலையில் செல்லும் கல்யாண ஊர்வலத்தைப் பார்த்ததும் பாய்ந்தோடி இறங்குகிறான். காரில் இருக்கும் மணமகளின் பக்கத்தில் ஏறி அமர்ந்து ‘அபிராமி. அபிராமி..’ என்று அவன் பிதற்ற ஆரம்பிக்க சுற்றியுள்ள கூட்டம் அவனை இழுத்துத் தள்ளி அடித்து உதைக்கிறது. ‘புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய’ என்று அவனுடைய வாய் அடி உதைகளுக்கு இடையேயும் அபிராமி அந்தாதியை தன்னிச்சையாக உச்சரிக்கிறது.

Reka
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 26 | நாயகன் பட ‘ஜனகராஜ்’!

குணாவைத் தாக்குகிற நபர்களைத் தடுத்து நிறுத்தி ஓடோடி வந்து அவனைக் காப்பாற்றுகிறாள் ரோசி. “யாரு அந்த அபிராமி.. நீ ஏன் ரோசியைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?” என்று சிகிச்சையின் போது டாக்டர் விசாரிக்க “வேணாம்.. அவ அபிராமி இல்லையே.. அவ செய்யற தொழில் சரியில்ல. எல்லாம் அசிங்கம்.. ரோசி அசிங்கம்” என்று பெண்டதால் மருந்தின் மயக்கத்தில் குணாவின் ஆழ்மனம் வார்த்தைகளை கொப்பளிக்கிறது. குணாவைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வருபவளும் ரோசிதான். “குணாவைக் கல்யாணம் பண்ணிக்கோ.. பெளர்ணமில” என்று அங்கு நோயாளியாக இருக்கும் ஒரு பெரியவர் ரோசியிடம் சொல்கிறார். அவர்தான் இந்த விதையை குணாவின் தலையில் இட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. “நீதான் குணாவைப் பார்த்துக்கணும். இந்த சித்தப்பான்ற ஆள் சரியில்லை” என்கிற எச்சரிக்கையை ரோசியிடம் சொல்கிறார் டாக்டர்

‘உன்னை நானறிவேன்.. என்னையன்றி வேறு யாரறிவார்?’..

தங்கியிருக்கும் வீட்டைக் காப்பாற்றுவதற்காக, சேட்டை ஏமாற்றுவதற்கு சித்தப்பா தரும் ஐடியா வெற்றிகரமாக தோற்றுப் போக, குணாவிற்கும் அவனுடைய தாய்க்கும் இடையில் உணர்ச்சிகரமான மோதல் நடக்கிறது. இடையில் புகுந்து குணாவை ஆற்றுப்படுத்துபவள் ரோசிதான். “அபிராமி.. வரலையே”.. என்று பிதற்றும் குணாவிடம் “வருவா.. அவ வராட்டி நான் இருக்கேன்” என்று குணாவை இழுத்து தன்னுடன் சேர்த்து கட்டியணைத்துக் கொள்கிறாள் ரோசி. “ஆனா.. நீ அபிராமி இல்லையே” என்று குணா மறுக்க ரோசியின் முகம் சுருங்குகிறது. “நான் அபிராமி இல்ல. ரோசி. வெறும் மனுஷி” என்று அவளுடைய வாய் பரிதாபமாக முனகுகிறது. கண்ணுக்குத் தெரியாத அபிராமியின் மீது குணா பெருங்காதல் கொண்டிருக்க, யதார்த்தத்தில் அவனைக் காதலிக்கும் பெண்ணாக ரோசி இருக்கிறார் என்பதற்கான சாட்சியக் காட்சியிது.

தூங்க முடியாமல் தவிக்கும் குணாவை ‘உன்னை நானறிவேன்.. என்னையன்றி யாரறிவார்’ என்று ரோசி பாடும் தாலாட்டுப் பாடலில் கருணையும் காதலும் கலந்து ஒலிக்கிறது. இருட்டிய பின் விளக்கேற்றியபடி ரோசி பாடும் போது குணாவிற்காக படைக்கப்பட்ட தேவதையைப் போலவே ஒளிர்கிறாள்.

‘நான் மிசஸ் குணா’ - திகைப்பு கொள்ளும் ரோசி

இதற்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்து விடுகின்றன. சித்தப்பாவின் தவறான வழிகாட்டுதலில், கொள்ளையடிப்பதற்காக கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறான் குணா. அங்கு அபிராமியின் அழுத்தமான சாயலைக் கொண்ட தேவதை போன்ற பெண்ணொருத்தியால் வசீகரிக்கப்படுகிறான். தீயவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவளை ஒரு குகையில் பத்திரமாக ஒளித்து வைக்கிறான். ஆரம்பத்தில் வெறுத்தாலும், ஒரு கட்டத்தில் குணாவின் நிபந்தனையில்லாத அன்பை அந்த ‘அபிராமி’ புரிந்து கொள்கிறாள். அவனுடைய ஒரே விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தாலி கட்டிக் கொள்ளச் சம்மதிக்கிறாள்.


ஆனால் அபிராமியை குணா கடத்தி வந்திருப்பதாக கருதும் காவல்துறை குகையை முற்றுகையிடுகிறது. அப்போது நடக்கும் சண்டையில் ஒரு காவலரின் உயிர் தவறுதலாக பறிபோகிறது. தமிழக காவல் அதிகாரி குணாவின் மீது ஆத்திரம் கொள்கிறார். ‘அவனைச் சுட்டுத் தள்ளுவேன்’ என்று ஆவேசமாக முழங்குகிறார். இப்படியொரு சிக்கலான சூழலில் குணாவிற்கு ஆதரவாக இருப்பவர்கள் சிலர்தான். “நான் பேசி அவனை அமைதி்ப்படுத்தறேன். தூண்டி விட்டா அவன் இன்னமும் வயலண்ட்டா மாறிடுவான்” என்று டாக்டர் எவ்வளவோ எடுத்துச் சொன்னாலும் அதிகாரியின் ஆத்திரம் தணிந்தபாடில்லை. “ரோசி.. சொன்னா.. குணா நிச்சயம் கேட்பான். அவளை விட்டு பேசச் சொல்லலாம்” என்று சொல்லப்படும் ஆலோசனையையும் அவர் கேட்பதாக இல்லை.


இந்தச் சமயத்தில் யாரும் அறியாமல் குகைக்குள் நழுவிச் சென்று விடுகிறாள் ரோசி. அப்போது நடக்கும் டிராமா மிக சுவாரசியமாக மாறுகிறது. குணாவை உள்ளுக்குள் நேசித்த ரோசி ஒரு பக்கம். குணாவை திருமணம் செய்து கொண்ட அபிராமி இன்னொரு பக்கம். தன் கழுத்தில் உள்ள தாலியைப் பெருமிதத்துடன் எடுத்துக் காட்டுகிறாள் அபிராமி. ரோசியின் முகத்தில் திகைப்பு ஏற்படுகிறது. “ஓ.. குணாவை ஏமாத்தி சமாளிக்கறதுக்காக கட்டினதா.. பரவாயில்ல. வெளியே போனவுடன் கழட்டிடலாம்” எ்ன்று ரோசி ஆறுதலாகச் சொல்ல அபிராமிக்கு மெல்லிய கோபம் வருகிறது. “அவர் என் ஹஸ்பெண்ட்.. நான் மிசஸ் குணா” என்று அபிராமி சொல்ல ரோசிக்கு திகைப்பு கூடுகிறது. ‘மிசஸ் குணா’ என்கிற சொற்களைக் கேட்டவுடன் மகிழ்ச்சி தாங்காமல் குதூகலித்து சிரிக்கிறான் குணா.

குணாவைக் காப்பாற்ற முயலும் ரோசி

“குணா.. உன் கைல இருக்கற துப்பாக்கியைக் கொடுத்துடு. அதைக் கொண்டு போய் கீழ போலீஸ் கிட்ட காட்டினாதான் உன் மேல தப்பில்லைன்னு நம்புவாங்க” என்று ரோசி உருக்கமாக வேண்டுகோள் வைக்க, அதை அழிச்சாட்டியமாக மறுக்கிறான் குணா. பிறகு அதே வேண்டுகோளை அபிராமி முன்வைக்க இப்போது சம்மதிக்கிறான். துப்பாக்கியை ஒப்படைக்கிறான். ரோசியின் கட்டுப்பாட்டில் இருந்தும் அவளுடைய அன்பின் பிடியில் இருந்தும் குணா கை மாறி விட்டான் என்பதை உணர்த்தும் காட்சி இது. “சரி.. நான் கீழ போறேன். நீங்க வாங்க.. வரும் போது குணாவை கூட்டிட்டு வாங்க” என்று அந்தச் சமயத்திலும் குணாவின் மீதுள்ள காதல் குறையாமல் சொல்கிறாள் ரோசி. கிளம்பும் போது குணாவின் கையை அவள் பிடிக்க, அதை இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறான் குணா. இந்த பிரியாவிடையின் நாடகத்தை பின்னணியில் ஒலிக்கும் இளையராஜாவின் ஒற்றை வயலின் மேலும் உணர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.

துப்பாக்கியை கீழே கொண்டு வரும் ரோசி “அந்த அம்மா நல்லாத்தான் இருக்காங்க. ஒண்ணும் ஆபத்தில்ல” என்கிற தகவலை கொண்டு வருகிறாள். குணாவைக் காப்பாற்றக்கூடிய முக்கியமான ஆயுதம் இந்தத் தகவல்தான். ஆத்திரம் கொண்டிருக்கும் அதிகாரியின் முகத்தில் இப்போது சற்று குழப்பம் வருகிறது. கோபம் தணிகிறது. தன் உயிரைப் பணயம் வைத்து ரோசி செய்யும் சாகசம் காரணமாக, குணாவும் அபிராமியும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை வரும் போது அதைக் குலைக்கும் வகையில் சில விஷயங்கள் நடந்து விடுகின்றன. இருவரும் மனிதர்களிடமிருந்து விலகி தங்களின் பிரத்யேக உலகில் பயணித்து ஒன்றாக கலந்து விடுகிறார்கள்.

அபிராமிக்கு நிகரானவள் ரோசி

பரத்தையர் தொழிலில் இருக்கும் ரோசி, தினசரி பல காமாந்தகார்களைச் சந்திக்க வேண்டிய அவலத்தில் இருக்கிறாள். அந்த இருளின் இடையே பரிசுத்தமான குணத்துடன் இருக்கும் குணாவின் மீது அவளுக்கு கனிவும் காதலும் ஏற்படுகிறது. இதை மறைமுகமாக பல காட்சிகளில் வெளிப்படுத்துகிறாள். ஆனால் குணாவின் இலக்கு அபிராமியை நோக்கி இருக்கும் போது ரோசியால் என்னதான் செய்து விட முடியும்?!.

ஏறத்தாழ அபிராமிக்கு நிகரான பாத்திரம் ரோசியுடையது. சமயங்களில் அபிராமியை விடவும் உயர்வானது. இந்தப் பாத்திரத்தை தனது இயல்பான நடிப்பால் சுமந்திருந்த ரேகாவை, குணா திரைப்படத்தை நினைவு கொள்ளும் போதேல்லாம் கூடவே நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியொரு மறக்க முடியாத பாத்திரம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com