நடிகர் திலீப் விவகாரத்தில் மலையாள இளம் நடிகர்கள் இணைந்து புதிய நடிகர் சங்கம் உருவாக்க திட்டமிட்டுள்ளதால் கேரள நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல நடிகைக்கு பாலியல் துண்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர் தீலிப் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கேரள நடிகர் சங்கமான 'அம்மா' அமைபில் இருந்து அவர் நீக்கப்பட்டார். 85 நாள்கள் சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீனில் வெளியே வந்த திலீப் மீண்டும் 'அம்மா' அமைப்பில் சேர்க்கப்பட்டார். சங்கத்தின் தலைவரான மோகன்லாலின் முடிவுக்கு இளம் நடிகர், நடிகைகள் பலர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நடிகைகள் சமூகவலைத்தளம் மூலமாக கேள்வி எழுப்பினர். இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவு கிடைத்தது. இதேபோல், நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டதை எதிர்த்து நடிகர் ப்ரித்வி ராஜ் உள்பட சுமார் 100 இளம் நடிகர்கள் தனித்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கேரளாவில் புதிய நடிகர் சங்கம் உருவாக்கப்படுவதாகவும், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.