நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நடத்தும் “What’s Next India 2021” எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கும் பெருமையை பெற்றுள்ளார் நடிகை அமலா பால்.
ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் பார்ப்பது வெளிநாடுகளைத் தாண்டி இந்தியாவிலும் பார்வையாளர்களை அதிகரித்துள்ளது. இதனால், தொடர்ச்சியாக ஓடிடி தளங்கள் பிரபல இயக்குநர்களையும் பிரபல நடிகர்களையும் வெப் சீரிஸ் தயாரித்து வருகிறது. அப்படித்தான், நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் வெப் சீரிஸ்களில் தொடர்ச்சியாக நடிகை அமலாபால் நடித்து பாராட்டுக்களை குவித்து வருகிறார். படங்கள், வெப் சீரிஸ் என இரண்டு தளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் வெளியான நெட்ஃபிளிக்ஸ் “பிட்ட கதலு” திரைப்படத்தில் அமலாபாலின் அற்புத நடிப்பு, ரசிக்ரகளிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டு பெற்றுள்ளது. இதனால், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நடத்தும் “What’s Next India 2021” எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கும் பெருமையை பெற்றுள்ளார் நடிகை அமலா பால். இந்த நிகழ்வில், இந்திய அளவில் பெரும் பிரபலங்களான பிரியங்கா சோப்ரா, கரண் ஜோகர், விக்ரமாதித்யா மோத்வானி, விவேக் கோம்பர் ஆகியோர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. இந்த கலந்துரையாடலில் அமலாபால் கலந்துகொள்வது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமையாகும்.
இந்நிகழ்வில் கலந்துகொள்வது குறித்து அமலா பால் பேசும்போது,
“இந்திய திரை உலகின் மிகப்பெரும் ஆளுமைகளுடன் இந்நிகழ்வில் கலந்து கொள்விருப்பது மிகப்பெரும் உற்சாகத்தையும் மகிழ்வையும் தந்துள்ளது. தென்னிந்திய திரையுலகின் அடையாளமாக, நெட்ஃபிளிக்ஸ் டிஜிட்டல் திரையின் அனுபவங்களை நான் பகிர்ந்துகொள்ளவுள்ளது மிகப்பெரும் கௌரவம்.
இந்நேரத்தில் மிக முக்கிய படைப்பாக அனைவராலும் பாராட்டப்படும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் “பிட்ட கதலு” படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் ஒவ்வொரு திரைப்படத்திலும் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தி வரும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.