மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’.
தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில், புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரின் நடிப்பு ஒருபுறம் அசுரத்தனமாக இருந்தது என்றால், செம்மரக் கடத்தலை தடுக்கும் போலீஸ் அதிகாரியாக கடைசி சில நிமிடங்களில் தெறிக்கவிட்ட ஃபஹத் பாசில் புஷ்பாவே கண்டு அஞ்சும் ஒரு கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இரண்டு எதிரெதிர் திமிர் கொண்ட கதாபாத்திரங்கள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் விதமாகவும், போலீஸ் அதிகாரி ஃபஹத் பாசிலை எதிர்த்து எப்படி புஷ்பா தன் ராஜாங்கத்தை கட்டமைக்கப்போகிறார் என்ற கேள்விகளுடன் முதல் பாகம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ”புஷ்பா 2 தி ரூல்” எடுத்து முடிக்கப்பட்டு தற்போது திரைக்கு வரவிருக்கிறது. இப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படும் நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரானது பக்கா மாஸ்ஸாக வெளியிடப்பட்டுள்ளது.
புஷ்பா 2 திரைப்படத்தின் ட்ரெய்லரானது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லர் லாஞ்ச் நிகழ்ச்சி வைக்கப்பட்ட நிலையில், அதற்கே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடி படக்குழுவினரை திணறடித்தனர்.
ட்ரெய்லரை பொறுத்தவரையில் புஷ்பா தன்னுடைய ராஜ்ஜியத்தை கட்டமைக்கும் வகையில் மாஸ்ஸான காட்சிகளுடன் தொடங்குகிறது. ஆனால் அதற்கு அடுத்த பாதியில் ”Are deewano mujhe pehchaano Kahan se aaya main hoon kaun” என்ற அமிதாப் பச்சனின் டான் பட பாடலை ஒலிக்கவிட்டு எண்ட்ரி கொடுக்கும் ஃபஹத் பாசில் புஷ்வாவின் ஆட்களை தலைகீழாக தொங்கவிட்டு, செம்மர கடத்தலுக்கு பெரிய தடுப்பாக நின்று அவரின் ராஜ்ஜியத்தில் அதகளம் செய்கிறார்.
ஆனால் போகப்போக ட்ரெய்லரானது நேஷ்னலை கடந்து, இண்டர்நேஷனல் பிசினஸ்மேனாக புஷ்பாவை காட்சிப்படுத்துகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக “புஷ்பாவ வெறும் நேஷ்னல்னு மட்டும் நினைச்சிங்களா இண்டர்நேஷ்னல்” என புஷ்பாவே பேசும் வசனம் மாஸ்ஸாக வைக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லரின் முடிவில் என்ன தீ பத்திக்க போகுதா என ஃபஹத் பாசில் கேட்கும் இடத்தில், தீ இல்ல காட்டுத்தீயே பத்திக்க போகுது என புஷ்பாவின் தெறிக்கவிடும் வசனத்தோடு முடிகிறது டிரெய்லர்.
முதல் பாகத்தை பொறுத்தவரையில் அல்லு அர்ஜுன், ஃப்ஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உடன் ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்ஜெயா, அனசுயா பரத்வாஜ், அஜய் உள்ளிட்ட பலபேர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்தப் படத்தில், சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். மாபெரும் வரவேற்பைப் பெற்ற முதல் பாகம் வசூலில் ரூ.390 கோடி வசூலை ஈட்டியதாக கூறப்பட்டது. இரண்டாவது பாகம் அந்த வசூலை தாண்டும் வகையிலேயே படமாக்கப்பட்டிருப்பது ட்ரெய்லர் மூலம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.