கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விருது விழாவில் கலந்து கொண்ட ஜோதிகா, தஞ்சை பெரிய கோயில் பற்றியும் தஞ்சையில் உள்ள மருத்துவமனைகள் நிலை பற்றியும் பேசினார். இந்த கருத்துக்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்புகளும், ஆதரவுகளும் எழுந்தன. இந்நிலையில், ஜோதிகாவுக்கு ஆதரவாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விருது வழங்கும் விழாவில் திரைக் கலைஞர் ஜோதிகாவிற்கு அவர் நடித்த ராட்சசி படத்திற்கு 2019-க்கு சிறந்த பெண் நடிகர் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவில் தனக்கு வழங்கப்பட்ட விருதை பெற்றுக் கொண்டு பேசிய திரை கலைஞர் ஜோதிகா தஞ்சையில் ஒரு படப்பிடிப்புக்கு சென்ற போது தான் பார்த்த சில விஷயங்களை பதிவு செய்துள்ளார்.
பிரகதீஸ்வரர் கோவில் மிக அழகாக உள்ளது. உதய்பூர் பேலஸ் போல உள்ளது. படப்பிடிப்புக்காக தஞ்சை அரசு மருத்துவ மனைக்குச் சென்ற போது அது அடிப்படை வசதியற்று, பராமரிப்பற்று இருந்தது என்றும், நாம் கோவில்களை பராமரிக்க அதிகம் செலவு செய்கிறோம் பெயின்ட் பண்ணுகிறோம், கோவில் உண்டியல்களில் பணம் போடுகிறோம். அதே போல அரசு மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் கொடுங்கள் என்ற வேண்டுகோளை வைத்தார்.
தன் கருத்தை சொல்வதற்கு ஜோதிகாவற்கு உரிமை உண்டு. ஜோதிகாவின் இக்கருத்தை ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. இன்று அரசுபள்ளிகள் போதுமான கட்டமைப்பு வசதிகளற்றுக் கிடக்கின்றன. பல பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. மேலும் அரசு மருத்துவமனைகளில் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், உயிர்காக்கும் மருந்துகள் இல்லாமலும் ஏழை எளிய மக்கள் தவித்து வருகின்றனர்.
அவர் பேசிய இந்த வீடியோவை ஒவ்வொருவரும் தனக்கு சாதகமாக சில பகுதியை மட்டும் எடுத்து பதிவிட்டு இந்து கோவிலை ஜோதிகா இழிவு படுத்திவிட்டதாகவும், ஜோதிகா இந்து கோவில்களுக்கு நன்கொடை கொடுக்க வேண்டாம் என்று சொன்னதாகவும் பொய்யான தகவலை முகநூலில் பரப்பி வருகின்றனர். ஒரு பெண் என்பதாலேயே ஆபாசமான சொற்களையும், பாலியல் நிந்தனைச் சொற்களை பயனபடுத்தி விமர்சித்து வருகின்றனர். இத்தகைய செயல் அநாகரீகமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.
2013-ம் ஆண்டு பிரதமர் மோடி, இந்தியாவில் கோவில்கள் அதிகம் உள்ளன. எனவே இனிமேல் கோவில்களை அல்ல, கழிவறைகளை கட்டுங்கள் என்று சொன்னார். ஜோதிகாவின் அதே வார்த்தையைத் தான் அன்று மோடி பேசி இருக்கின்றார். இருவர் பேசியிருப்பதும் ஒரே கருத்துதான்.
இங்கு என்ன விஷயம் பேசினார்கள் என்பது முக்கியமல்ல. யார் பேசினார்கள் என்பதே முக்கியம். அன்று மோடியை கொண்டாடியவர்கள் இன்று ஜோதிகாவை இழிவு படுத்துகின்றனர்.
கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் என்றென்றும் களத்தில் நிற்கும். ஜோதிகாவை இழிவாக முகநூலில் பதிவிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக காவல்துறையை ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.