உலகப் போரில் ஜெர்மனியை திணறடித்த ஆலன் டூரிங்கின் கணித விளையாட்டு; ’தி இமிடேஷன் கேம்’

உலகப் போரில் ஜெர்மனியை திணறடித்த ஆலன் டூரிங்கின் கணித விளையாட்டு; ’தி இமிடேஷன் கேம்’
உலகப் போரில் ஜெர்மனியை திணறடித்த ஆலன் டூரிங்கின் கணித விளையாட்டு; ’தி இமிடேஷன் கேம்’
Published on

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியானது ஐரோப்பிய நாடுகளை சூறையாடி முன்னேறியது. அதற்கு பின்னால் அதன் இராணுவ பலம் மட்டுமல்ல ஒரு புத்திசாலி கண்டுபிடிப்பான எனிக்மா என்ற எந்திரம் அவர்களிடம் இருந்தது. எனிக்மா நாஜி படைகளுக்கு சங்கேத பாஷைகளை அனுப்பி அதன் மூலம் அடுத்தடுத்த தாக்குதல்களுக்கான கட்டளைகளை கொடுத்து வந்தது. இதனால் ஜெர்மனியின் தாக்குதல் யுக்தியை கணிக்க முடியாமல் பிரிட்டன் உட்பட அதன் நேச நாடுகள் திணறி வந்தன. எனிக்மாவின் சங்கேத பாஷைகளை டீகோட் செய்வது கற்பனையில் தான் சாத்தியம் என நம்பும் அளவிற்கு அதன் பலம் இருந்தது. 

இந்நிலையில் பிரிட்டனின் கணிதவியலாளர் ஆலன் டூரிங், பிரிட்டன் படைகளுக்கு உதவ தானே முன் வந்து M16 என்ற பிரிட்டீஸ் இண்டலிஜன்ஸ் ஏஜென்சியில் இணைகிறார். இன்று ஆலன் டூரிங்கின் பிறந்த நாள். 1912ஆம் ஆண்டு லண்டனில் இதே நாளில் அவர் பிறந்தார். ஆலன் டூரிங்கின் கூற்று படி எனிக்மாவை தோற்கடிக்க நாம் அதுபோல ஒரு எந்திரத்தைத்தான் உருவாக்க வேண்டுமே தவிர இப்படி அவர்களின் சங்கேத பாஷைகளை கண்டறிய குழு அமைத்து 24 மணி நேரமும் இயங்குவதால் எந்த பலனும் இல்லை என்கிறார். 

தன்னால் எந்தவொரு சங்கேத பாஷையினையும் டீகோட் செய்யுமளவிற்கு ஒரு எந்திரத்தை உருவாக்க முடியும். அதற்கு ஒருலட்சம் பவுண்டுகள் வரை தேவைபடலாம் என்கிறார். ஆரம்பத்தில் அதை ஏற்றுக் கொள்ளாத M16 பின் அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கிறது. அவரும் குறுக்கெழுத்துகள், கண்டறிவதில் வல்லவர்கள் சிலரை துணைக்கு வைத்துக் கொண்டு ஒரு எந்திரத்தை வடிவமைக்கிறார். அதற்கு கிரிஸ்டோபர் என பெயர் சூட்டுகிறார். 

தொடர்ந்து ஜெர்மன் படைகள் முன்னேறி வருகின்றன. ஆனால் ஆலன் டூரிங்கின் எந்திர வடிவமைப்பு முயற்சியில் முன்னேற்றம் ஏதுமில்லை. கோபமடையும் M16 உங்கள் முயற்சி சாத்தியம் இல்லாதது என அதை நிறுத்தச் சொல்கிறார்கள். ஆனால் ஆலன் டூரிங் தன் குழுவுடன் முழு நம்பிக்கையுடன் அதை வடிவமைத்து முடிக்கிறார். அதில் வெற்றியும் கிடைக்கிறது. ஆனால் இதை உடனே உபயோகித்து ஜெர்மனின் அடுத்த நடவடிக்கையை தோற்கடித்தால் நாஜி படைகளுக்கு சந்தேகம் வரும். அவர்கள் தன் எனிக்மாவை மாற்றி விடுவார்கள். பிறகு நம்முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும் என்கிறார் ஆலன். எனவே படிப்படியாக ஜெர்மன் படைகளுக்கு சந்தேகம் வராதபடி போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இறுதியில் முற்றாக ஜெர்மன் படைகள் வீழ்த்தப்படுகிறன. 

இரண்டாம் உலகப் போரில் 1941-ற்கு பிறகு ஜெர்மனி வீழ்ந்ததற்கு நேசநாடுகளின் கைகோர்ப்பும் பலமும் காரணமல்ல.. ஆலன் டூரிங் போன்ற அறிவு ஜீவிகளின் கணித விளையாட்டு தான் காரணம் என்கிறது 2015'ல் வெளியான “The Imitation Game” எனும் சினிமா. 

நார்வேயைச் சேர்ந்த இயக்குநர் Morten Tyldum இயக்கிய முதல் பிரிட்டன் திரைப்படம் இது. Andrew Hodges எழுதிய ஆலன் டூரிங்கின் பயோகிராஃபியான, Alan Turing: The Enigma -என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டது. வசனங்கள் இப்படத்தின் பெரும் பலம். ஆலன் டூரிங் தானாக முன்வந்து M16-இல் இணைய வருகிறார், அப்போது அவரிடம் “ஏன் உங்களுக்கு ஜெர்மனி பிடிக்காதா…?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது அதற்கு அவர் “யுத்தம் பிடிக்காது” என்கிறார். 

பீரியட் பிலிம்களை பொருத்தமட்டில் கலை இயக்குநர்களின் உழைப்பு அதிகம் தேவைப்படும். அவ்வகையில் நம்மை 1940-களுக்குள் அப்படியே கொண்டு சென்று இரண்டாம் உலகப் போரை நம் கண்முன் நேரலைபோல் காட்டுகிறது இப்படம்.

ஆலன் டூரிங் தன்பால் சேர்க்கையாளர். அப்போது பிரிட்டனில் தன்பால் சேர்க்கைக்கு அங்கீகாரம் இல்லாத நிலையில் அவருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது. தனது கிரிஸ்டோபரை அதாவது அவரது மிஷினை பிரிய மனமில்லாமல் அவர் இத்தண்டனைக்கு ஒத்துழைத்தார். பிறகு அவர் தனது 41-வது வயதில் ஜூன் 7, 1954 அன்று தற்கொலை செய்து கொண்டார். 

கிரிஸ்டோபர் அவரது பள்ளிக்கால தோழன். ஆலன் டூரிங்கின் இணை. அவன் நினைவாகத் தான் அந்த எந்திரத்திற்கு கிரிஸ்டோபர் என பெயர் சூட்டினார் ஆலன். இதனை எல்லாம் அழகான காதல் காட்சிகளாக இப்படம் பதிவு செய்கிறது. 2015’ல் ஆஸ்கர் விருது, Empire award for best Thriller என பல்வேறு விருதுகளை இப்படம் பெற்றது.

1885 முதல் 1967 வரை தோராயமாக 49,000 தன்பால் சேர்க்கையாளர்களுக்கு பிரிட்டன் அரசு தண்டனை வழங்கியது. வரலாற்று ஆசிரியர்கள் “ஜெர்மனியின் எனிக்மா முறியடிக்கப்பட்டதால் தான் யுத்தம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முற்று பெற்றது. இதனால் 14 மில்லியன் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது.” என்கிறார்கள். ஆனால் ஆலன் டூரிங்’கின் உழைப்பிற்கு எந்த வெகுமதியும் கிடைக்காமல் போனது. 

ஆலன் டூரிங் அங்கீகரிக்கப்படுவதற்கு பதிலாக தண்டிக்கப்பட்டதற்காக பிரிட்டன் பிரதமர் “கார்டன் பிரவுன்” 2009-இல் பிரிட்டீஷ் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 2013 -இல் இரண்டாம் ராணி எலிசபெத், டூரிங் மீதான அத்தனை குற்றங்களையும் வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அவர் நினைவாக அந்த மிஷினை அவர்கள் ‘டூரிங் மிஷின்’ என்றார்கள். இப்போது அதை நாம் ‘கம்ப்யூட்டர்’ என்கிறோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com