இன்று தனது 49-தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் அஜித்குமார். திரைப்பட நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், சமூக வலைதள கணக்குகள் என எங்கேயும் காண முடியாத அஜித்தை திரையில் மட்டுமே காண முடிகிறது. திரைப்படத்தை தவிர அஜித்தின் முகத்தை வேறு எந்த திரையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் காணமுடியாதது என்பது பல விமர்சனங்களை கொடுத்தாலும் அவரது ரசிகர்கள் அதனை விரும்பி ஏற்கிறார்கள்.
அஜித்தின் தற்போதைய மூவி கிராஃப்பில் வருடத்துக்கு இரண்டு படம் என்பதே கடினமாக இருக்கிறது. ஆனாலும், அவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே? எப்படி?
'நீங்கள் ஏன் அஜித் ரசிகர்'? என்று அவரது ரசிகர்களிடம் கேட்டால், சிரித்துக்கொண்டே 'தெரியவில்லை, ஆனால் அஜித் ரசிகர்' என்பார்கள். இதுதான் அஜித்துக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான பிணைப்பாக உள்ளது.
அஜித் நடிப்பதை நிறுத்திவிட்டாலும் அவருக்கான ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து ஒருவர் கூட இடம்பெயர்ந்துவிட மாட்டார்கள். திரைப்படம் என்பதை தாண்டி, நடிகர் என்பதை தாண்டி அஜித்திடம் அவர் ரசிகர்கள் எதையோ கண்டுக்கொண்டு விடுகிறார்கள். அந்த பிணைப்பு தான் அஜித்தை என்றுமே கொண்டாட வைக்கிறது.
வயது வித்தியாசம் இல்லாமல் அஜித்துக்கு ரசிகர்கள் உண்டு. அஜித் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருப்பவர்கள் வெறும் இளைஞர்கள் மட்டுமல்ல. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவாகவே அது இருக்கிறது. பிரபலங்களுக்கு ரசிகர்கள் இருப்பது வாடிக்கைதான். ஆனால் பல பிரபலங்களே ரசிகர்களாக இருக்கும் நடிகர்களில் அஜித்குமார் மிகமுக்கியமானவர்.
அனைவரிடத்திலும் மரியாதை, எளிமை போன்ற இயல்புகளால் அனைவரையும் வசீகரித்து விடுகிறார் அஜித் குமார் என்பதே பல பிரபலங்களின் வாக்கு. ''ஒரு முறை அஜித் ரசிகர் ஆகிவிட்டால், என்றுமே அஜித் ரசிகர் தான்'' என்பதுவே அஜித் ரசிகர்களின் கான்செப்ட். ஏன் அப்படி? என்று பெரிய ஆய்வுகள் எல்லாம் தேவையில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, திரைப்படம் என்பதை தாண்டி, நடிகர் என்பதை தாண்டி அஜித்திடம் அவர் ரசிகர்கள் எதையோ கண்டுகொண்டு விடுகிறார்கள். அந்த பிணைப்பு தான் அஜித்தை என்றுமே கொண்டாட வைக்கிறது.