’விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் அஜீத், மீண்டும் செர்பியா செல்ல இருக்கிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், காஜல், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட பலர் நடிக்கும் படம், ‘விவேகம்’. அனிருத் இசை அமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் செர்பியா உட்பட பல்வேறு நாடுகளில் நடந்தது. தீவிரவாதிகளை வேட்டையாடும் அதிகாரியாக அஜீத் நடிக்கிறார். இந்தப் படக்குழு செர்பியாவுக்கு மீண்டும் செல்ல இருக்கிறது. இதுபற்றி படக்குழு கூறும்போது, ‘வெளிநாடுகளில் 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பின் போது விவேக் ஓபராய்க்கு காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அஜீத்தும் அவரும் மோதும் காட்சிகள் படமாக்கப்படவில்லை. படக்குழு சென்னை திரும்பிவிட்டது. இப்போது அந்தக் காட்சியை மீண்டும் படமாக்க உள்ளனர். இதற்காக அஜீத், விவேக் ஓபராய் உள்ளிட்ட படக்குழுவினர் செர்பியாவுக்கு விரைவில் செல்ல இருக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளனர்.