‘கையெடுத்து கும்பிடறேன்.. இப்படி செய்யாதீங்க’- உயிரிழந்த அஜித் ரசிகரின் உறவினர்கள் கதறல்

‘கையெடுத்து கும்பிடறேன்.. இப்படி செய்யாதீங்க’- உயிரிழந்த அஜித் ரசிகரின் உறவினர்கள் கதறல்
‘கையெடுத்து கும்பிடறேன்.. இப்படி செய்யாதீங்க’- உயிரிழந்த அஜித் ரசிகரின் உறவினர்கள் கதறல்
Published on

அஜித்தின் ‘துணிவு’ படம் பார்க்கச் சென்று லாரியின் மேலிருந்து குதித்தப்போது 19 வயதான இளைஞர் உயிரிழந்தநிலையில், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பரத்குமார் குடும்பத்தின் பின்னணி குறித்து கூறியுள்ளது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது. இதனையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு ரோகிணி திரையரங்கில் வெளியான ‘துணிவு’ பட சிறப்புக் காட்சியை காண ஏராளமான அஜித் ரசிகர்கள் வருகை தந்து, பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். அப்போது அஜித்தின் தீவிர ரசிகரான 19 வயது பரத்குமார், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்றுக் கொண்டிருந்த லாரி மீது ஏறி நடனம் ஆடியபடி கீழே குதித்தபோது, முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த அஜித் ரசிகர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும் செல்லும் வழியிலே அவர் உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சிச் தெருவை சேர்ந்த ஜானகிராமன் - லலிதா தம்பதியின் மூத்த மகன் தான் பரத்குமார் என தெரியவந்தது.

உயிரிழந்த பரத்குமார் கோயம்பேடு மார்கெட்டில் மூட்டைத் தூக்கியும், லோடு வண்டி ஓட்டியும், தனது குடும்பத்தை காப்பற்றிக்கொண்டே, தனியார் கல்லூரியில் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது தம்பி அவினாஸையும் இவர்தான் படிக்க வைத்து வந்ததாக தெரிகிறது. பரத்குமார், தீவிர அஜித் ரசிகர் என்பதால் அஜித் படம் ஒவ்வொரு முறையும் திரையரங்கில் வெளிவரும்போது முதல் காட்சி பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

அந்தவகையில் அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கான டிக்கெட்டை அதிக விலை கொடுத்து வாங்கி முதல் காட்சிக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அந்த கோர விபத்து ரசிகர் பரத்குமாருக்கு நிகழ்ந்துள்ளது. இதையறிந்த பரத்குமாரின் குடும்பம் நிலைகுலைந்துள்ளது. மகனை இழந்த துயரம் ஒருபக்கம் எனில், அவரை நம்பித்தான் குடும்பம் இருந்தது மறுப்பக்கம். திடீரென பரத்குமார் உயிரிழந்தநிலையில், அவரது இழப்பை தாங்க முடியாமல் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பரத்குமார் சித்தியான ஆரோக்கியம் தெரிவித்ததாவது, “வேலைக்குத்தான் போயிருக்கான் என்று நினைத்தோம். ஆனால், அன்னைக்கு உழைச்ச கூலிப் பணம் ரூ. 1000 கொடுத்து டிக்கெட் வாங்கி படத்துக்கு போயிருக்கான். சின்ன காயம் என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால் அடி வயிறு கலங்கி ரொம்ப மோசமான நிலையில் இருந்தான். எந்த நடிகர்களும் வந்து சோறு போடமாட்டாங்க. நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் அவங்க உங்க உயிர காப்பாத்த மாட்டங்க.

உங்க கால்ல கூட விழுறேன். ரசிகரா இருங்க. ஆனால் உங்க குடும்பத்தை முதலில் பாருங்க. இந்தச் செய்திக் கேட்டு பரத்குமாரின் அம்மா பேச முடியாதநிலையில் இருக்கிறார். அஜித், விஜய், ரஜினி ஆகிய நடிகர்களுக்கு எங்களுடைய வேண்டுகோள். உங்களுடைய ரசிகர்களுக்கு நீங்கள் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி கூற வேண்டும். பரத்குமார் உங்கள் படத்தை பார்க்க வந்தார். நாங்கள் பரத்குமாரை பிண அறையில் வந்து பார்கிறோம். இதுபோன்று நடக்காமல் பார்த்து கொள்ளவேண்டும்” என்று உருக்கமாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதேபோல் பரத்குமாரின் நண்பர் கிஷோர் தெரிவித்துள்ளதாவது, “பரத்குமார் தீவிர அஜித் ரசிகர். அவர் எங்களை எல்லாம் விட்டுவிட்டு, தல அஜித் நடித்த ‘துணிவு ’படத்திற்கு சென்றார். யாரும் ஓடும் வண்டியில் ஏரி நடனம் ஆட முடியாது. அவர் நின்று கொண்டு இருந்த வண்டியில் ஏரிதான் நடனம் ஆடினார். எதிர்பாராத விதமாக சம்பவம் நடந்து விட்டது. அஜித் ரசிகர்கள் அவரது குடும்பத்திற்கு உதவி செய்யவேண்டும். பரத்குமார் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அவரது அம்மா அப்பாவை இனி யாரு காப்பாற்றுவார்கள். அஜித் ரசிகர்கள் நாம்தான் உதவி செய்யவேண்டும்” என்று தெரிவித்தார்.

மற்றொரு நண்பர் கூறுகையில், “பரத்குமார் ரொம்ப நல்லவர். இறந்து விட்டார் என்று சொல்லும்போது நான் நம்பவே இல்லை. நேற்று இருந்தவர் இன்று இல்லை என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கு. கூலி வேலை செய்து படித்து குடும்பத்தை கவனித்து வந்தார்” என்று தெரிவித்தார். மற்றொரு நண்பர் பேசுகையில் ‘தல தளபதினு எங்களுக்கு யாரும் வேண்டாம். ஒரு ஷோவால அவனது உயிரேப் போச்சு. இனிமே அவன் திரும்பி வர மாட்டான். அவனோட குடும்பம் நடுத்தருவுல நிக்கப்போகுதுனு மட்டும் தெரியப் போகுது” என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

கையெடுத்து கும்பிடுறேன்... ரசிகர்களுக்கு நடிகர்கள் சொல்லி புரிய வையுங்க...

உயிரிழந்த அஜித் ரசிகர் பரத்குமாரின் சித்தி வேண்டுகோள்...#Chennai | #ThunivuFDFS | #Bharathkumar | #Thunivu | #Ajithukumar| #Rohinicinemas | #Bharathkumar pic.twitter.com/SL14f5XOl8
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 11, 2023

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com