“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா

“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா
“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா
Published on

தலைவி படத்தில் எனக்கு ஏற்பட்டிருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை என இயக்குநர் ஏ.எல்.விஜயை, அஜயன் பாலா சாடியுள்ளார்.

எழுத்தாளர், வசனகர்த்தா, இயக்குநர், என பன்முகம் கொண்டவர் அஜயன் பாலா. இவர் வனயுத்தம், சென்னையில் ஒரு நாள், மனிதன், தியா, லட்சுமி ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். மேலும் மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், வேட்டை, தேவி, வனமகன் ஆகிய படங்களின் திரைக்கதையில் பங்களித்திருக்கிறார்.

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கி வரும் 'தலைவி' படத்தின் கதை விவாதத்திலும் பணி புரிந்திருக்கிறார் அஜயன் பாலா. ஆனால், நேற்று வெளியிடப்பட்ட 'தலைவி' படத்தின் போஸ்டரில் அஜயன் பாலாவின் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜய் தன் முதுகில் குத்திவிட்டதாக அஜயன் பாலா சாடியுள்ளார். இது தொடர்பாக அஜயன் பாலா தனது ஃபேஸ்புக் பதிவில், “சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்தித்திருந்தாலும் ‘தலைவி’ படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக் கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து நீதிமன்ற வழக்குகளில் ஆதாரமாகப் பயன்படுத்திக் கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரைச், சுத்தமாக நீக்கிவிட்டார்கள்.

திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்குப் புறம்பாக, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நான் நீக்கும்படி கோரிக்கை வைத்ததுதான் நான் அவமானப்படுத்தப்படக் காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குநர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன்.

இதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஆய்வு, எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவாதம் என ஒன்றரை வருட உழைப்புக்குக் கிடைத்த பலன் முதுகு குத்தல்தான். இத்தனைக்கும் முந்தைய நாள் கூட பேசினேன். அப்போது கூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்குக் கிடைக்கப்போகும் அவமானத்தை எண்ணி அகமகிழ்ந்திருப்பார்போல.

இப்படி எழுதியதால் எனக்கு முறையாகச் சேர வேண்டிய சம்பளப் பாக்கி கொடுக்க மாட்டார்கள். நட்பிற்காகக்கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரியவேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை” எனத் தெரிவித்துள்ளார். பதிவு போட்ட சிலமணிநேரத்தில் அந்த பதிவை அஜயன் பாலா நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com