நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்னு விஷால், விக்ராந்த் நடிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லால் சலாம். கடந்த மாதம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகி இருந்த இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசைமைத்து இருந்தார். கிரிக்கெட்டை பேசுபொருளாக வைத்து, அதனூடே இரண்டு ஊர்களுக்கு இடையே நிலவும் மத பிரச்னைகளை பேசியிருந்தது 'லால் சலாம்'. ஆனாலும், திரைப்படமாக எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றதால், வசூல் ரீதியாகவும் திரைப்படம் தோல்வி அடைந்தது.
லால் சலாம் திரைப்படத்தின் ட்ரைலர், அதன் பாடல்கள் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் எதிர்பார்ப்பும் இத்திரைப்படத்திற்கு எக்குத்தப்பாக இருந்தது. திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், திரைப்படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் நடித்ததற்கு எழுந்த எதிர்ப்பு என பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் படமும் வெளியாகி தோல்வி அடைந்தது.
இதனைஅடுத்து, சில தினங்களுக்குபின், இதுதொடர்பாக பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரைப்படத்தின் 21 நாட்கள் ஃபுட்டேஜ் காணாமல் போனதாக தெரிவித்திருந்தார். ஹார்ட் டிஸ்க் மிஸ் ஆகாமல் இருந்திருந்தால், நாங்கள் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக சொல்லி இருப்போம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான், லால் சலாம் ஓடிடி வெளியீடு குறித்து சமீபத்தில் பேசி இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், படம் விரைவில் ஓடிடியில் வெளிவரும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “`லால் சலாம்’ படத்தின் Extended Director’s Cut சீக்கிரம் OTTயில் வெளிவர உள்ளது. இது திரையரங்க பதிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். நாங்கள் இழந்த காட்சிகளை மீட்டு இந்த பதிப்பில் சேர்த்துள்ளோம். நான் எழுதியபடியே இந்த பதிப்பு இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன். மேலும் இந்த பதிப்புக்கு புதிய இசையினை ஏ ஆர் ரஹ்மான் பதிவு செய்ய விரும்பினார். அவர் இதற்காக எந்த கூடுதல் ஊதியத்தையும் வாங்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.