அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி63’ படத்தில், நடிகர் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
‘சர்கார்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தளபதி63’. வழக்கம் போல் இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்தப் படத்தினை அட்லி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களை விஜய்யை வைத்து இயக்கி உள்ளார். வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியை இந்த இரு படங்களும் ஈட்டின. இதனை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார்.
இந்நிலையில், ‘தளபதி63’ படத்தில் விஜய், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, கால்பந்து பயிற்சியையும் அவர் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தில் கால்பந்து வீரர்கள் வேடத்தில் 16 புதுமுகங்கள் நடிக்கவுள்ளனர். ‘தளபதி63’ன் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. தீபாவளிக்கு ரீலிஸ் ஆகவுள்ள இந்தப் படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கூடிக் கொண்டே செல்கிறது. இருப்பினும் இந்தத் தகவல் இன்னும் படக்குழுவினரால் உறுதி செய்யப்படவில்லை.
தமிழ் சினிமாவில், விளையாட்டு சம்பந்தமான படங்கள் பல வெற்றியடைந்து வருகிறது. சமீபத்தில் வெளியான பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘கனா’ வெற்றியடைந்ததும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அதன் தொடர்ச்சியாக அட்லியும் விளையாட்டு சார்ந்த படத்தை இயக்கவுள்ளதாக தெரிகிறது.