பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம்வருகிறார், சல்மான் கான். இவரை, கொலை செய்ய பிரபல கேங்க்ஸ்டாரான லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதையடுத்து, சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிஷ்னோய் சமூகத்தில் புனிதமான விலங்காகப் பார்க்கப்படும் மான்களை, கடந்த 1998ஆம் ஆண்டு சல்மான் கான் வேட்டையாடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதுதொடர்பாக, அச்சமூகம் அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறது. இதன்காரணமாகவே, அவர் அந்தக் கும்பலால் குறிவைக்கப்படுகிறார். மகாராஷ்டிர மாநில மூத்த அரசியல்வாதியான பாபா சித்திக், இந்தக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகே, சல்மானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்கூட, ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சல்மான் கானைத் தொடர்ந்து நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்து, போலீஸ் லேண்ட்லைன் எண்ணிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாந்த்ரா காவல் நிலையத்திற்கு ஷாருக் கானை மிரட்டி ரூ.50 லட்சம் கேட்டு அழைப்பு வந்தாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மும்பை பந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசாருடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து இந்த அழைப்பு வந்ததாக மும்பை போலீஸ் குழு கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில், போலீஸ் குழுவினர், சத்தீஸ்கருக்கு புறப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.