மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்துள்ளதாக கூறுகிறார் 'அருவி' மூலம் கவனம் ஈர்த்த அதிதி பாலன்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2015 ஆண்டு வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'. இத்திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதிதி பாலன். இதைத்தொடர்ந்து இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் 'அருவி'.
இப்படத்தில் நடித்த அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை. இடையில், ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டும் நடித்தார். இந்நிலையில், பிரிதிவிராஜ் நடிப்பில் உருவான 'கோல்டு கேஸ்' மலையாள படத்தில் அதிதி நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று வெளியாகி இருக்கிறது.
நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்பது தொடர்பாக 'சினிமா எக்ஸ்பிரஸ்' தளத்துக்கு அளித்த பேட்டியில் விவரித்திருக்கிறார். அதில், "அருவி படத்துக்குக்குப் பிறகு நான் எடுத்துக்கொண்ட இந்த இடைவெளி நிறைய பேருக்கு மிக நீண்டதாகத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது சினிமாவைப் புரிந்துகொள்வதற்காக நான் தேர்ந்தெடுத்த ஒரு வழி.
கடந்த சில ஆண்டுகளாக இந்த இடைவெளியில் நன்றாகவே திரைத்துறையைப் புரிந்துகொண்டேன். சினிமாவில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கண்டுபிடிக்கவும், சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன்.
`கோல்டு கேஸ்' படத்துக்கு பின்பு மலையாளத்தில் `படவேட்டு' என்ற படத்திலும், தமிழில் `நவராசா' என்ற படத்திலும், தெலுங்கில் சகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறேன். வெவ்வேறு மொழிகளில் பணியாற்றுவது எனது நடிப்பின் புதிய அம்சத்தை வெளிப்படுத்த உதவும் என்று நம்புகிறேன்.
விஜய் சேதுபதி மற்றும் நலன் குமாரசாமியுடன் இணைந்து பணியாற்ற விரும்பியதால் 'குட்டி ஸ்டோரி' ஆந்தாலஜி படத்தில் நடித்தேன். ஆனால், 'நவரசா' கதை என்னைத் தேடி வந்தது. அதனை என்னால் மறுக்க முடியவில்லை. ஏனென்றால் இது மணிரத்னம் சார் படம். அதேபோல் நல்ல திரைக்கதை கொண்ட படம். இந்தப் படத்துக்காக நான் டெல்லி கணேஷ் சாருடன் இணைந்து பணியாற்றினேன். இவர்களுடன் பணியாற்றியது ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது" என்று கூறியிருக்கிறார்.
அதிதி நடிப்பில் தமிழில் அடுத்து வெளியாகவிருக்கும் `நவராசா' ஒரு ஆந்தாலஜி படம் ஆகும். இதனை 9 இயக்குநர்கள் இயக்க, கொரோனாவால் உருக்குலைந்த தமிழ் சினிமா தொழிலார்களுக்கு உதவும் வகையில் மணிரத்னம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.