தமிழில் ஆர்யா, கிருஷ்ணா நடித்த ’யட்சன்’ படத்தில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் அடில் ஹூசைன். ஸ்ரீதேவி நடித்த ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ஆங்கில படமான, ’லைஃப் ஆப் பை’ உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ரஜினியின் ’2.ஓ’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
பஹ்ரைனில் நடக்கும் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர், அங்கு பேசும்போது, ’கமர்சியல் படங்கள் என்ற பெயரில் நல்ல சினிமா ரசனையை ரசிகர்களுக்கு கொடுக்கத் தவறி வருகிறோம். ரசிகர்களின் சிந்தனையை மாற்றும் விதமான படங்கள்தான் இன்றைய தேவை. ஆனால், அந்த மாதிரி படங்களை நாம் கொடுப்பதில்லை. இப்படியே சென்றால், எது நல்ல சினிமா என்கிற விஷயமே ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விடும். எந்த டிசைனர் பண்ணியது என்று உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதில் கூட எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால், சினிமாவுக்கு எது முக்கியம்? உடைகளா, கதைகளா? பார்வையாளர்களுக்கு நல்ல சினிமாவை கொடுக்காததும் குற்றம் என்றே நினைக்கிறேன்’ என்றார்.