பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் காட்டப்படாத பணமோசடி நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டதாக வருமானவரி்த் துறை குற்றம்சாட்டியிருந்தது.
டெல்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இவை அனைத்தும் ஃபேண்டம் ஃபிலிம்ஸ், அனுராக் காஷ்யப், டாப்ஸி, விகாஸ் பல், மது மண்டேனா, க்வான் என்கிற திறன் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆகியோர் தொடர்புடைய இடங்கள்.
டாப்ஸிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான பண ரசீது ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் `நான் மலிவானவள் இல்லை' என்று பதிவிட்டு 3 காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவிலிருந்து...
"3 நாள்கள், 3 விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை நடந்தது.
1. பாரிஸில் எனக்குச் சொந்தமாக பங்களா ஒன்று இருப்பதாக கூறுகிறார்கள். அதன் சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை விடுமுறை நாள்கள் வரப்போகின்றன.
2. என் பெயரில் இருப்பதாகச் சொல்லப்படும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரசீது. அதை எடுத்து ஃப்ரேம் செய்து மாட்டி எதிர்காலத்தில் எனக்குத் தரப்போகிறார்கள். ஏனென்றால், அந்தப் பணம் வேண்டாம் என்று நான் ஏற்கெனவே மறுத்தேன்.
2. நமது மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013-ஆம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையைப் பற்றிய என் நினைவுகள் என்னிடம் இருக்கின்றன.
பி.கு: இனி நான் மலிவானவள் இல்லை"
வேளாண் சட்டத்துக்கு எதிராகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, மத்திய அரசுக்கு எதிரான அவர்களது கருத்துக்கள்தான் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மகராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் இந்த நடவடிக்கையை "அவர்களின் குரல்களை அடக்கும் முயற்சி" என்று விமர்சித்துள்ளார்.
ஆர்.ஜே.டி யின் தேஜாஷ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாஜி அரசு தற்போது சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கலைஞர்களை துரத்திக்கொண்டிருக்கிறது” என்று கடுமையாக சாடியுள்ளார்.