”எனது செயற்கை காலை ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் கழட்டி சோதனை செய்வதை பிரதமர் மோடி தடுக்கவேண்டும்” என்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார் நடிகை சுதா சந்திரன்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவந்த நடிகை சுதா சந்திரன் கடந்த 1981 ஆம் ஆண்டு திருச்சி அருகே விபத்தில் சிக்கினார். இதனால், அவரது வலது காலில் பாதி நீக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தற்போதுவரை தமிழ், இந்தி சீரியல்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். இவர் நடிப்பில் வெளியான ‘நாகினி’ சீரியல் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சுதா சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில். ”பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் அகற்றப்படுவது அவமானமாகவும் வேதனையாகவும் உள்ளது. ஒவ்வொரு முறையும் செயற்கை காலை அகற்றுவது வாட்டி வதைத்து வலியைக் கொடுக்கிறது. எனது செயற்கை காலுடனேயே பல நாடுகளிலும் நடனமாடி நாட்டை பெருமைப்படுத்துகிறேன். ஆனால், விமான நிலைய அதிகாரிகளிடம் செயற்கை காலை சோதனைக்காக காட்டவேண்டியிருக்கிறது. வயதானவர்களுக்கு இருப்பதைப்போல எங்களுக்கும் ஒரு அட்டைக் கொடுங்கள். எனது செய்தி மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன்” என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.