’த்ரிஷ்யம்’ தெலுங்கு ரீமேக்கை இயக்கி பாரட்டுக்களைக் குவித்த நடிகை ஸ்ரீப்ரியாவே, தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள ’த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்டாக ஸ்ரீப்ரியாவுக்குப் பதில் ஜீத்து ஜோசப்பே இயக்குகிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதற்கு மாறாக, 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தை தயாரித்தது போலவே, ’த்ரிஷயம் 2’ தமிழ் ரீமேக்கை ஸ்ரீப்ரியா தனது கணவர் ராஜ்குமார் சேதுபதி உடன் இணைந்து தயாரிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இப்படத்துக்கு இணை தயாரிப்பாளராக ஆண்டனி பெரும்பாவூர் இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை - இயக்குநர் - தயாரிப்பாளர் - அரசியல்வாதி என பல்வேறு தளங்களில் பயணித்து வெற்றி கண்டிருக்கும் ஸ்ரீப்ரியாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
’த்ரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கை நீங்கள் ஏன் இயக்கவில்லை?
"மலையாளத்தில் ’த்ரிஷ்யம் 2’ படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தவுடனேயே தெலுங்கில், அதன் ரீமேக்கை இயக்கவேண்டும் என்ற ஆர்வத்தில்தான் நானும் இருந்தேன். ஏனென்றால், தெலுங்கிலும் 'த்ரிஷ்யம்' சூப்பர் ஹிட் அடித்தது. அதனால், தெலுங்கு ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், 'த்ரிஷ்யம் 2' தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் தற்போது வெளியாகி இருக்கிறது. பல மாதங்களாக சட்டமன்றத் தேர்தலையொட்டி தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். அதனால், தெலுங்கு ரீமேக்கை இயக்க எனக்கு கொஞ்சம்கூட நேரமில்லை. முதலில் என்னிடம்தான் ’த்ரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கை இயக்க கேட்டார்கள். இந்தக் காரணங்களைக் கூறி நான் தாமதமாகும் என்றதால் ஜீத்து ஜோசப்பே இயக்குகிறார்."
’பாபநாசம்’ ஹீரோ கமல்ஹாசனே ’த்ரிஷ்யம் 2’ ரீமேக்கில் நடிக்கிறாரா?
"நிச்சயமாக அவர்தான் நடிக்கவேண்டும். கமல் சார் நடித்தால் மட்டுமே ’பாபநாசம் 2’ பண்ணுவோம். இல்லையென்றால், பண்ணமாட்டோம்."
கெளதமி நடிக்கிறாரா?
"கெளதமி நடிக்கிறாரா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ’த்ரிஷ்யம் 2’ தமிழில் ஜீத்து ஜோசப்தான் இயக்குகிறார். அவர்தான் முடிவு செய்வார். நான் தயாரிப்பாளர் மட்டுமே. எப்போதும் இயக்குநர்கள் எடுக்கும் முடிவுகளில் நான் தலையிட மாட்டேன். 'பாபநாசம்' படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், நான் ஒருநாள் கூட ஷூட்டிங் செல்லவில்லை. முழு சுதந்திரமும் இயக்குநருக்கு கொடுக்கவேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளவள். எதிலும் தலையிடமாட்டேன். அதனால், வெறும் தயாரிப்புப் பணிகளை கவனித்து வந்தேன். அதுவும், எனது கணவர்தான் அனைத்து பணிகளையும் பார்த்துக்கொண்டார். அதனால், நடிகர்கள் தேர்வு அனைத்தும் ஜீத்து ஜோசப் சார்தான் பண்ணுவார். ஆனால், இது மட்டும் உறுதி. கமல் சார் நடிக்கவில்லை என்றால் ’த்ரிஷ்யம் 2’ நாங்கள் பண்ணமாட்டோம்."
கமல்ஹாசன் ‘த்ரிஷ்யம் 2’ பார்த்துவிட்டு என்ன சொன்னார்?
"படம் வெளியாகி வெற்றியடைந்துள்ளது குறித்து சாருக்குத் தெரியும். ஆனால், இன்னும் படம் பார்க்கவில்லை. அவர், விருப்பப்படும்போது போட்டுக்காட்டவுள்ளோம். தேர்தல் பணிகளில் மும்மரமாய் ஈடுபட்டு வருவதால், படத்தைப் பார்க்க கமல் சாருக்கு நேரம் இல்லை."
- வினி சர்பனா